4 வயதில் கின்னஸ் சாதனை படைத்த சிறுமி, ஒலிம்பிக் போட்டியில் வெற்றிபெற்று சாதனை படைக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு, விடாமுயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரேம்நாத், சுவேதா தம்பதியின் மகள் சஞ்சனா. பிளாஸ்டிக் வில், அம்பை கையில் வைத்துக் கொண்டு விளையாடத் தொடங்கிய போது, சஞ்சனாவுக்கு வயது, 2 வருடம் 9 மாதம் மட்டுமே. இந்நிலையில், ஒரு நாள், சஞ்சனாவின் கையில் நிஜ வில் அம்பு பரிசாக கிடைக்க, அதுவே அவரை எட்டாத புகழை அடைய வைத்துள்ளது. எப்போதும் வில் அம்புடன் சுற்றித் திரிந்த சஞ்சனாவைக் கண்ட பெற்றோர், அவளின் திறமையை புரிந்து கொண்டு, கராத்தே மற்றும் வில்அம்பு விளையாட்டு பயிற்சியாளர் ஹூசைனியிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.
முதல் சந்திப்பிலேயே சிறுமியின் திறனைக் கண்டு வியந்த பயிற்சியாளர், கடந்த 2018ம் ஆண்டு ஆக்ஸ்ட் 15ம் தேதி, சுதந்திர தினத்தன்று, 4 வயது சஞ்சனாவை, உலக சாதனை முயற்சிக்கு தயார்ப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அதில் பங்கேற்கவும் செய்துள்ளார். கிடைத்த வாய்பை சரியாக பயன்ப்படுத்திக் கொண்ட சஞ்சனா, மூன்றரை மணி நேரத்தில், ஆயிரத்து 111 அம்புகளை எய்து, பார்வையாளர்களை மிரளச் செய்தார். இந்த சாதனைக்காக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து வாழ்த்தும் பெற்றுள்ளார்.
பின்னர் தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்ட சஞ்சனா, அனைத்திலும் வெற்றி பெற்று பதக்கங்களை குவித்துள்ளார். இந்தாண்டு சுதந்திர தினத்தன்று, கண்ணை கட்டிக் கொண்டு, ஒரு மணி நேரத்தில் 307 அம்புகளை எய்து, பார்வைத் திறன் குறைபாடு கொண்டவர்களும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையை அவர்களுக்குள் ஏற்படுத்தினாள்.
எதிர்காலத்தில் இந்தியாவுக்கு ஒலிம்பிக் பதக்கங்களைப் பெற்றுக் தருவதோடு, தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பார் என நம்பிக்கையுடன் கூறுகிறார் பயிற்சியாளர் ஹுசைனி.
பயிற்சியாளர் மட்டும் நினைத்தால் போதுமா? ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்று, அர்ஜுனா விருதைப் பெற வேண்டும் என்பதே தனது கனவு என்று சஞ்சனாவும் கூறுகிறாள்.
சஞ்சனா ஒலிம்பிக் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெருவார் என்றும், இதை சஞ்சனாவின் தந்தையாக இல்லாமல், அவளின் ரசிகனாகவும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக, சஞ்சனாவின் தந்தை நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
இன்னும் சரியாகவே பேசத் தொடங்காத இந்த மழலை, தன்னுடைய வில் வித்தையின் மூலம், அவளைப்பற்றி மக்களையும் பேச வைத்துள்ளாள். சஞ்சனாவின் இந்த முயற்சிக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post