மக்களவை தேர்தலையொட்டி, அதிமுக சார்பில் தொகுதி பங்கீடு செய்வதற்கும், தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்கும், பிரசார பணிகளை முறைப்படுத்தவும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 5 பேர் கொண்ட தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
அந்த குழுவில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, எம்.பி வைத்திலிங்கம், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அமைப்பு செயலாளர் ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மக்களவை தேர்தலுக்காக தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில், அமைப்பு செயலாளர் சி.பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அமைப்பு செயலாளர் செம்மலை, மனோஜ் பாண்டியன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் A.W ரபி பெர்னாட் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசார பணிகளை முறைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பா.வளர்மதி, அமைப்பு செயலாளர் கோகுல இந்திரா, எம்.பி வேணுகோபால் மற்றும் செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post