குரூப் 4 தேர்வில் முறைகேடு புகாருக்கு உள்ளான 99 தேர்வர்களை, தகுதி நீக்கம் செய்ததுடன், வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத டி.என்.பி.எஸ்.சி தடை விதித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில், பிற மாவட்டங்களில் இருந்து தேர்வு எழுதியவர்கள், தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் அதிகப்படியாக தேர்வாகி உள்ளதை டி.என்.பி.எஸ்.சி தனது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
தேர்வாணையம் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் 99 தேர்வர்கள் இடைத்தரகர்களின் ஆலோசனையின் பேரில் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களைத் தேர்வு செய்ததாகவும், இடைத்தரகர்களிடம் இருந்து பெற்ற விடைகளை குறித்தவுடன் சில மணி நேரங்களில் மறையக்கூடிய சிறப்பு மை பேனாவில் விடைகளை குறித்துவிட்டு வந்தது தெரியவந்ததாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இடைத்தரகர்கள் தேர்வுப் பணியில் ஈடுபட்டிருந்த நபர்களின் துணையுடன் 52 தேர்வர்களின் விடைத்தாள்களில் திருத்தம் செய்து மாற்று விடைகளைக் குறித்து, அதே விடைத்தாள் கட்டுகளில் சேர்த்து வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதில் 39 தேர்வர்கள் முதல் 100 தரவரிசைக்குள் வந்துள்ளனர்.
நேரடியாக விசாரணை நடத்தியதில் கீழக்கரை, ராமேஸ்வரம் மையங்களில் தவறு நடந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த மையங்களை தவிர வேறு எந்த இடங்களிலும் எந்த தவறும் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இதையடுத்து முறைகேடு புகாருக்கு உள்ளான, 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்ததுடன், வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத டிஎன்பிஎஸ்சி தடை விதித்துள்ளது. தரவரிசைப் பட்டியலில் வந்துள்ள 39 தேர்வர்களுக்கு பதில் தகுதியான வேறு 39 நபர்களை தேர்வு செய்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இடைத்தரகர்கள் உதவியுடன் செயல்பட்ட 99 தேர்வர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்த்தல் அடிப்படையில் தகுதியான தேர்வர்களுக்கு உடனடியாக கலந்தாய்வு நடத்தப்படும். இனி வரும் காலங்களில் எந்த தவறுகளும் நிகழாத வண்ணம் தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
தேர்வர்கள் தேர்வாணயத்தின் மீது நம்பிக்கை வைத்து நேர்மையான முறையில் தேர்வை அணுகுமாறு டிஎன்பிஎஸ்சி கேட்டுக்கொண்டுள்ளது.
Discussion about this post