குரூப்-2A தேர்வு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஜெயக்குமார் மற்றும் ஓம்காந்தனை, மீண்டும் 6 நாள் காவலில் வைத்து விசாரிக்க, சிபிசிஐடி காவல்துறையினருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஜெயக்குமாரை 7 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதே போன்று, மற்றொரு நபரான ஓம்காந்தனை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அதன் பின் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், குரூப்-2A விவகாரம் தொடர்பாக இடைத்தரகர் ஜெயக்குமார் மற்றும் ஓம்காந்தனை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது, சிபிசிஐடி காவல்துறையினர் தரப்பில், இருவரையும் 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நீதிமன்றம், ஜெயக்குமார் மற்றும் ஓம்காந்தனை 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.
விசாரணைக்கு பிறகு, இருவரையும் வரும் 24ம் தேதி மதியம் 2 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Discussion about this post