தீபாவளி நாளில் மக்கள் அனைவரும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் பசுமைப் பட்டாசுகளைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். பசுமைப் பட்டாசுகள் என்றால் என்ன?
மாசு குறைவாக உள்ள பட்டாசே ’பசுமைப் பட்டாசு’ – என்று அழைக்கப்படுகிறது. உலகின் வேறு எந்த நாட்டிலும் பசுமைப் பட்டாசு என்ற ஒன்று இல்லை. இது இந்திய தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனமான ‘நீரி’யின் (NEERI) கண்டுபிடிப்பு ஆகும். அந்த வகையில் பசுமைப் பட்டாசு தயாரிப்பில் உலகின் முதல் நாடாக இந்தியா உள்ளது.
மாசு காரணமாக 2017ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் பட்டாசுகளுக்கு தடை விதித்ததை அடுத்து, 2018ம் ஆண்டில் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பசுமைப் பட்டாசுகளைத் தயாரிக்க வேண்டும் என்று கூறிய பின்னர் நீரியால் இவை உருவாக்கப்பட்டன.
பார்க்கும் போது பசுமைப் பட்டாசுகள் சாதாரணப் பட்டாசுகளைப் போலவே இருக்கும். ஆனால், வழக்கமான பட்டாசில் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் அலுமினியம் முக்கிய மூலப் பொருளாக உள்ளது. ஆனால் பசுமைப் பட்டாசில் அலுமினியத்தைக் குறைத்து மெக்னீசியம் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் வெடிமருந்தின் சூத்திரமும் நீரியின் ஆலோசனைப்படி மாற்றப்பட்டு உள்ளது. இதனால் நைட்ரஜன் மற்றும் கந்தக வாயுக்கள் மாசுக்களாக வெளியேறுவது கட்டுப்படுத்தப்படும். சாதாரண பட்டாசு ஏற்படுத்தும் காற்று மாசை விட பசுமைப் பட்டாசின் மாசு 30 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை குறைவாக இருக்கும்.
சாதாரண பட்டாசுகள் 120 டெசிபல் ஒலியை எழுப்பும் போது, இவை 111 டெசிபல் ஒலியையே எழுப்பும் என்பதால் பசுமைப் பட்டாசுகளால் ஒலி மாசும் குறையும். பசுமைப் பட்டாசில் 4 வகைகள் உள்ளன. வாட்டர் ரிலீசர் வகையைச் சேர்ந்த பசுமைப் பட்டாசுகள் வெடிக்கும் போது அவை கரியாக மாறாமல், நீராக மாறும். இவற்றால் தீ விபத்துகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஸ்டார் வகை பசுமைப் பட்டாசுகளில் ஆக்சிஜன் ஏஜண்டுகள் உள்ளதால், இவற்றின் காற்று மாசு மிகக் குறைவாக இருக்கும். சபல் வகை பசுமைப் பட்டாசில் அலுமினியம் மிகக் குறைவாக இருக்கும், இதுவும் காற்று மாசைக் குறைக்கும். அரோமா வகைப் பசுமைப் பட்டாசு வெடிக்கும் போது அதில் இருந்து நறுமணம் வெளிப்படும். பசுமைப் பட்டாசுகள் என்பவையும் அடிப்படையில் பட்டாசுகள்தான். இவற்றை வெடிக்கும் போதும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
Discussion about this post