தமிழகத்தில் அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதை கட்டாயமாக்கியுள்ள பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என கோரி கோபிகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில் அனைத்து பள்ளி வாகனங்களிலும் சிசிடிவி கேமராக்கள் மற்றும், இருக்கும் இடத்தை கண்டறிய உதவும் ஜி.பி.எஸ் கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் பள்ளி வாகனங்களில் மாணவ மாணவிகளுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்களை தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் இந்த முடிவுக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள் இந்த உத்தரவை ஒரு மாத காலத்திற்குள் அமல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.
Discussion about this post