தன்னார்வலர்கள் உதவி செய்ய தடை இல்லை என்றும், தமிழக அரசு அதனை வரைமுறைப்படுத்தியுள்ளது என்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் 2வது நாளாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், காவல் ஆணையர் டேவிட்சன், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசு உயர் அதிகாரிகள் பலர் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர். மேலும், கூட்டத்தில் சிறு குறு வியாபாரிகள், வணிகர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்க அமைப்பினரும் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மக்களை காக்கும் பணியே முதல் பணியாக எடுத்து செயல்பட்டு வரும் தமிழக அரசுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து பேசிய அவர், தன்னார்வலர்கள் உதவி செய்ய தடை இல்லை என்றும், மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து தன்னார்வலர்கள் செயல்பட தமிழக அரசு அதனை வரைமுறைப்படுத்தி உள்ளது என்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
Discussion about this post