அடையாறு, கூவம் உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளில் ஆறுகளைத் தூர் எடுத்து கரைகளையும் வலுப்படுத்திவருகிறது தமிழக அரசு. இதன் பின்னுள்ள திட்டம் என்ன? மக்களுக்கு இதனால் என்ன பயன்? – விளக்குகின்றது இந்தத் செய்தி தொகுப்பு…..
கடந்த இருபது ஆண்டுகளில் சென்னை மாநகரம் வெள்ளத்தால் பல பாதிப்புகளைச் சந்தித்து உள்ளது. கடந்த 2005, 2008, 2015 மற்றும் 2017 ஆகிய வருடங்களில் சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. இதனால் தொழில் நிறுவனங்களும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே இந்த பாதிப்புகளை தவிர்க்கும் வகையில் நீண்ட கால நோக்கில் தீர்வு காண்பதற்கு தமிழக அரசு ஒரு விரிவான ஆய்வினை பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொண்டது.
இதனையடுத்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கடந்த 2018ஆம் ஆண்டில் 100 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது. இந்தத் தொகையின் மூலம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கூவம், அடையாறு, கொசஸ்தலையாறு மற்றும் கோவளம் ஆற்றுப் படுகைகளில் பணிகள் தொடங்கப்பட்டன. பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான 2019-20ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையில் சென்னை வெள்ள பாதிப்பு தணிப்பு நடவடிக்கைகளுக்காக 284 கோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த நிதிகளைக் கொண்டே தற்போது கூவம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத் தணிப்பு நடவடிக்கைகள் துரிதமாகவும் துல்லியமாகவும் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளில் ஒவ்வொரு இடத்திலும் 20 முதல் 30 கனரக வாகனங்கள் பயன்படுத்தப்படுவதால் வேலைகள் அதிவேகத்தில் நடந்து வருகின்றன.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் வாழும் மக்களில் கணிசமானவர்கள் ஆறுகளை ஒட்டிய வெள்ள அபாயம் மிக்க பகுதிகளில் இருக்கிறார்கள், இவர்கள் அனைவரின் மனதிலும் அச்சத்தை போக்கி மகிழ்ச்சியைக் கொண்டு வந்துள்ளன தமிழக அரசின் வெள்ளத் தணிப்புப் பணிகள்.
இந்த நடவடிக்கைகள் ஒரு தொடக்கம் மட்டும்தான். வெள்ள பாதிப்பை ஒரேயடியாக தணிக்க இன்னும் பல தொலைநோக்குத் திட்டங்கள் தமிழக அரசிடம் உள்ளன. பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 பிரிவு 23, உட்பிரிவு 4ன் படி, தமிழக அரசின் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் இவ்வாண்டு ’தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் 2018-2030’ என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்காக 14 அம்சத் திட்டம் ஒன்றும் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் தமிழத்தில் உள்ள பேரிடர் அபாயமுள்ள பகுதிகள், பேரிடர் காலங்களில் கூட பாதிக்கப்படாத வகையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம் வரும் 2030ஆம் ஆண்டில் நிறைவடையும். இதனால் வரும் 2030ஆம் ஆண்டிற்குள் தமிழகம் பேரிடர்களை எளிதாகக் கடக்கும் மாநிலமாக வடிவம் பெறும்.
தமிழக இந்தத் தொலைநோக்குத் திட்டங்களும், முன்னெச்சரிக்கை செயல்பாடுகளும் தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுவருகின்றன.
Discussion about this post