தமிழகத்தில் புதிதாக 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில், முதற்கட்டமாக 630 மினி கிளினிக்குகளை வருகிற 15-ம் தேதி திறக்கப்படுகிறது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் அறிவித்தது போல், கிராமப்புறங்களில் ஆயிரத்து 400 கிளினிக்குகளும், சென்னையில் மாநகராட்சி, நகர்ப்புறங்களில் தலா 200 கிளினிக்குகளும், 200 நகரும் மினி கிளினிக்குள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதற்கட்டமாக 630 கிளினிக்குகள் வருகிற 15ஆம் தேதி திறக்கப்படுகிறது. மினி கிளினிக்குகளில், தலா ஒரு மருத்துவர், செவிலியர் மற்றும் சுகாதார பணியாளர் பணி அமர்த்தப்படுவார்கள் எனவும், நோயாளிகள் குறைவாக உள்ள இணை சுகாதார மையங்கள் மினி கிளினிக்குகளாக மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மினி கிளினிக் கட்டமைப்பு வசதிகள் குறித்து சுற்றறிக்கை வெளியீடு
புதிதாக அமையவுள்ள மினி கிளினிக்குகளில் இடம் பெற வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து சுகாதாரத்துறை இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, மினி கிளினிக்குகளின் வெளிப்புறச்சுவர்கள், பச்சை நிற வண்ணத்தில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளினிக்குகளில் பெயர் பலகை, காத்திருப்பு இருக்கைகள் கட்டாயம் இடம் பெற வேண்டும் எனவும், மூன்று மாதங்களுக்கு தேவையான அடிப்படை மருத்துகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருத்துகளை இருப்பில் வைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார நிலை மருந்தாளுநர்கள், மினி கிளினிக்குகளுக்கு சென்று மருந்து இருப்பு, காலாவதியாகும் தேதி குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மகப்பேறு பரிசோதனை உள்ளிட்ட அடிப்படை மருத்துவ உபகரணங்கள் இருக்க வேண்டும் எனவும், அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய மினி கிளினிக்கின் புகைப்படத்தை வருகிற 13-ம் தேதிக்கு முன்னதாக சுகாதாரத்துறை இயக்குநரகத்திற்கு அனுப்ப வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post