தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவுக்கு, சட்டப்பேரவையில் அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவை சட்டப்பேரவையில் தமிழக அரசு தாக்கல் செய்தது.
தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சிக்காலத்தில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தார்.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலகளிக்க கோரி, 2017ஆண்டு அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து, தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதை குறிப்பிட்டார்.
நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரும் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததை அடுத்து, அரசே முன்வந்து மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி, அரசு பள்ளி மாணவர்களின் நலனை காத்ததையும் பெருமிதமாக தெரிவித்தார்.
முன்பு அதிமுக அரசு கொண்டு வந்த அதே விதியின் கீழ் தான் தற்போதைய அரசும் சட்ட மசோதாவை கொண்டு வந்துள்ளதாக சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,
நீட் தேர்வுக்கு விலக்கு கோரி அரசு கொண்டு வந்த மசோதாவை வரவேற்பதாக தெரிவித்தார்.
மக்களின் நலன் சார்ந்து தமிழக அரசு எடுக்கும் முடிவுகளை அதிமுக என்றும் ஆதரிக்கும் என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.
அதிமுக உறுப்பினர்களின் ஆதரவோடு, நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.
Discussion about this post