தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்குச் சிகிச்சை அளிக்கத் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்காகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு சுகாதாரத்துறை சார்பில்
30 நடமாடும் மருத்துவமனைகள், நிலவேம்புக் குடிநீர் வழங்கும் 100 வாகனங்கள், கொசு ஒழிப்பு இயந்திரம் பொருத்திய 30 வாகனங்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இந்த 160 வாகனங்களைப் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது டெங்கு காய்ச்சலைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகத் தெரிவித்தார். தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கென்று தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார். காய்ச்சல் வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டார்.
Discussion about this post