ஊரகப் பகுதிகளில் உள்ள மாணவர்களின் நலன் கருதி, பள்ளிகளின் பாதுகாப்பிற்காக தடுப்புச் சுவர்கள் கட்ட, 144 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.
ஊரகப் பகுதிகளில் உள்ள ஊராட்சி ஆரம்பப் பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகங்களுக்கு, நடப்பு நிதியாண்டில் 250 கிலோ மீட்டர் நீளத்திற்கு, சுற்றுச் சுவர் மற்றும் வெள்ளத்தடுப்பு சுவர்கள் கட்ட, 144 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டப் பேரவையில் அறிவித்தார். அதன்படி, மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தடுப்பு சுவர்கள் மூலம் ஊரகப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்குள் அந்நியர்கள் மற்றும் விலங்கினங்கள் நுழைவதை தடுத்து மாணவர்களுக்கு பாதுகாப்பான சுற்றுச்சூழலை ஏற்படுத்த முடியும். குறிப்பாக பெண் குழந்தைகள் பாதுகாப்புடன் தங்கள் பள்ளிப்படிப்பை தொடர வழி வகுக்கும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் இந்த பணிகளை விரைவாக தொடங்கி, குறித்த நேரத்திற்குள் முடிக்க ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post