புதிய கல்வி கொள்கையில் மாற்றம் செய்தது மத்திய அரசு

தமிழக பள்ளிகளில் இந்தி கட்டாயமில்லை என்ற திருத்தப்பட்ட புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தேசிய அளவில் புதிய கல்வி கொள்கையை உருவாக்க மத்திய அரசு தரப்பில் முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு புதிய கல்வி கொள்கை தொடர்பான வரைவு திட்டத்தை மத்திய அரசிடம் சமர்பித்தது.

அதில் மும்மொழி கொள்கையின்படி மாநில மொழி, ஆங்கிலத்துடன் இந்தியும் கட்டாயமாக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கை தான் தொடரும் என்றும் தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்தது. மேலும் தமிழக அரசியல் தலைவர்களும் இந்தி மொழி கட்டாயம் என்ற பரிந்துரையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்தநிலையில், மும்மொழி கொள்கையில் இந்தி பேசாத பிற மாநிலங்களில் இந்தி கட்டாயம் என்ற பரிந்துரையை மத்திய அரசு நீக்கியுள்ளது. அதற்கு மாற்றாக 3-வது மொழியை விருப்பத்தின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இந்தி கட்டாயம் இல்லை என்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version