தமிழ் சினிமாவின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் அதில் காமெடி ஹீரோக்களுக்கென்று தனி அகராதியே இருக்கும். நிச்சயம் எப்படி இளையராஜா பாடல்கென்று படங்கள் ஓடியதோ…அதேபோல் காமெடி ஹீரோக்களுக்காகவும் அன்றைய காலத்தில் படங்கள் வெற்றிகரமாக ஓடின. அதற்கு காரணம் கவுண்டமணி என்னும் கலைஞன். இன்று அவர் தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
1939ல் மே25ல் பிறந்த கவுண்டமணி மேடை நாடகங்கள் வழியே சினிமாவிற்குள் நுழைந்தார். இயற்பெயரான சுப்பிரமணியை “கவுண்டமணி”யாக மாற்றியவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. அதற்கு காரணம் பேச்சுக்கு பேச்சு கவுன்டர் கொடுத்து எதிராளியை பேசவே விட மாட்டார். அதுவே “கவுன்டர் மணியை” காலப்போக்கில் கவுண்டமணியாக மாற்றியது.
அவர் இன்றளவும் தனித்து தெரிய காரணம் அவரின் ஆளுமை தான். படம் முழுவதும் வந்தாலும் அவரை மட்டுமே தனியாக காட்சிப்படுத்தலாம். அதுதான் அவரை 25 ஆண்டுகால காமெடிகளின் அரசனாக அமரவைத்தது.
தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், காமெடியன் என அவர் ஏற்று நடிக்காத கேரக்டர்களும்இல்லை…அரசியல்வாதி,போலீஸ், திருடன் என போடாத கெட்டப்களும் இல்லை.
தனக்கென்று ஒரு உடல்மொழி….வசனங்களை உச்சரிக்கும் முறை என அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
சக நடிகர்களை டிசைன் டிசைன் வார்த்தைகளில் திட்டுவது, போகிற போக்கில் ஹீரோக்களுக்கே பல்பு கொடுப்பது என அவர் செய்ததையெல்லாம் பார்த்தால் அவர் ஒரு மகான் தான்.
இன்றைக்கு சினிமாவில் நிலவுகிறது காமெடி வறட்சி. ஆனால் அன்றைக்கு தனது ஒவ்வொரு படத்திலும் ஒருவிதமான காமெடி என பிரித்து விளாசியிருப்பார் கவுண்டமணி.
மற்றவர்கள் சொல்ல தயங்கக்கூடிய இடமே சினிமாவில் அரசியல் பற்றி தான். ஆனால் சமகால அரசியலை போகிற போக்கில் சொன்னவர் இவரைப்போல் யாருமில்லை. எதிர்மறை அரசியல், அராஜக அரசியல், பில்டப் அரசியல், நேர்மையான அரசியல், கம்யூனிச அரசியல் என அனைத்திலும் புகுந்து விளையாடியிருப்பார் கவுண்டமணி.
அரசியலில் அடிமேல் அடிவாங்கும் நிலைமையை “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” என 90களில் போகிற போக்கில் சொல்லிவிட்டு சென்றார். சினிமாவில் சாதியம் முதல் சாமியார் வரை அவர் கிண்டல் பேச்சுகளுக்கு சிக்காமல் இல்லை. அவர் போலித்தனங்களை மிகத்தீவிரமாக எதிர்த்தார்.
செந்திலுடனான ஒரு காமெடியில், செந்தில் பழமொழியை கூற அதற்கு சரமாரியாக கவுன்டர் கொடுத்து சமூகத்தில் நடக்கும் மூட நம்பிக்கைகளை மக்கள் சிந்திக்கும்படி சொல்லியிருப்பார்.
மற்றொரு படமான மகாபிரபுவில், எந்த ஒரு அரசியல் சாராதவனையும் சமூகம் எப்படி அரசியலோடு பிணைக்கப் பார்க்கிறது என்பதனையும் நிஜமாக பிரதிபலித்திருப்பார்.
சினிமாவில் அவருக்கான சரியான ஜோடி நடிகர் செந்தில் தான். அதற்கு மிகச் சரியான உதாரணம் கரகாட்டக்காரன் திரைப்படம் தான். அந்த படத்தில் கவுண்டமணி இல்லையென்றால் தான் நடிக்கமாட்டேன் என இயக்குநரிடம் சொன்னாராம் செந்தில். அந்த அளவுக்கு புகழ் பெற்றார்கள். இருவரும் கிட்டத்தட்ட 450 படங்களுக்கு மேல் இணைந்து நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹீரோக்களில் கவுண்டமணிக்கு ஏற்ற இணை சத்யராஜ் தான். இருவரும் இணைந்து நடித்தால் நினைத்து நினைத்து சிரிக்கும் அளவிற்கு போட்டி போட்டு கொண்டு நடிப்பார்கள்.
இவர் சினிமாவில் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், ‘கரகாட்டக்காரன்’, ‘சின்னக்கவுண்டர்’,‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘நடிகன்’, ‘மன்னன்’, ‘நாட்டாமை’, ‘சூரியன்’ போன்ற படங்களை இவரின் காமெடிக்காவே என்றைக்கும் பார்த்து ரசிக்கக்கூடிய எவர்கிரீன் படங்கள்.
அதேபோல் அவரின் கேரக்டர்களின் பெயர்களான ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’,‘அஞ்சா சிங்கம் மருதுபாண்டி’,‘பன்னிக்குட்டி ராமசாமி’,‘ஐடியா மணி’,‘செல்லப்பா ஆசாரி’,‘ஒண்டிப்புலி’,‘சூப்பர்வைசர் சுப்பிரமணி’,‘சில்வர் ஸ்பூன் ஷில்பா குமார்’,‘குண்டலகேசி’ ஆகியவை கவுண்டமணியின் அடையாளங்கள்.
இவர் படத்தில் பேசும் வசனங்கள் யாவும் கதையில் இடம்பெறாதது. படப்பிடிப்பு தளத்தில் நடிக்கும் போது தோன்றும் வசனங்களையே பேசுவாராம்.
இப்படி அவரின் நடிப்பை படங்கள், கேரக்டர்கள், வசனங்கள் என பல ரகங்களாக பிரிக்கலாம். இவரை முன்மாதிரியாக கொண்டே நடிகர் சந்தானம் உட்பட சில காமெடி நடிகர்கள் முயன்றிருப்பார்கள்.
ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் ஆரம்பித்து விஜய், அஜித், சிம்பு வரை இரண்டு தலைமுறை முன்னணி நடிகர்களோடு நடித்துள்ளார் கவுண்டமணி
அவரது புகழ் ஒருபுறம் வளர்ந்தாலும் அவர்மீது ஒரு குற்றசாட்டும் மற்றொரு புறம் வளர்ந்தது. சினிமாவில் தன்னுடன் நடிப்பவர்களை அவர் நிறம், உடலமைப்பு சார்ந்து கேலி செய்கிறார் என்பது தான் அது. ஆனால் நிஜத்தில் அவர் அப்படியெல்லாம் இல்லை என்பார்கள் அவரைச் சுற்றி உள்ளவர்கள்.
தமிழ் சினிமாவில் அவரது இடம் இன்றளவும் காலியாகவே உள்ளது. மீண்டும் நடிக்க தொடங்கியிருந்தாலும் அவரின் மேனரிசங்களை திரையில் பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் ரசிகர்களுக்கு உண்டு. ஆனால் தான் எப்போதும் ராஜா தான் என்பதை தொலைக்காட்சியில் வெளியாகும் தன்னுடைய காமெடி மூலம் சொல்லிக்கொண்டே இருக்கிறார் இந்த கவுண்டமணி.
இன்றைக்கு டிவிட்டரில் #HBDGoundamani என்ற பெயரில் ட்ரெண்ட் செட்டரான “காமெடிகளின் ஐகான்” கவுண்டமணிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
Discussion about this post