முகநூல், ட்விட்டர் ஆகியவற்றுக்குப் போட்டியாக புதிய சமூக வலைத்தளம் ஒன்றை கூகுள் நிறுவனம் உருவாக்கி உள்ளது. அது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
மிகவும் வெற்றிகரமாக இயங்கி வரும் சமூக வலைத்தளங்களாக முகநூலும் ட்விட்டரும் உள்ளன. முகநூலுக்கு கடும் போட்டியாகப் பார்க்கப்பட்ட ஆர்குட் பின்னாட்களில் போட்டியில் தோற்றது. கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘கூகுள் பிளஸ்’ – சமூக வலைத்தளம் கடந்த 2011ல் சந்தைக்கு வந்து 8 ஆண்டுகள் போராடியும் வெற்றி பெற முடியாமல் கடந்த ஏப்ரலில்தான் இழுத்து மூடப்பட்டது.
கூகுள் பிளஸ் தோல்வி அடைந்தாலும், சமூக வலைத்தள உலகில் ஆதிக்கம் செலுத்தும் கூகுள் நிறுவனத்தின் ஆசை குறையவில்லை. அதன் வெளிப்பாடாகத்தான் தற்போது ‘ஷூலேஸ்’ – என்ற புதிய சமூக வலைத்தளத்தை கூகுள் உருவாக்கி உள்ளது. தற்போது அமெரிக்காவின் நியூயார்க்கில் மட்டுமே ஷூலேஸ் சமூக வலைத்தளம் வெள்ளோட்டம் விடப்பட்டு உள்ளது. விரைவில் இதன் சேவை உலகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
கூகுளின் ஷூலேஸ் ஒரு சமூக வலைத்தளமாக இருந்தாலும், இதன் முக்கிய இலக்காக கைபேசிகள்தான் உள்ளன. இது ஒரு கைபேசி செயலியாக இயங்குகிறது. இதனால் சீனாவின் சமூக வலைத்தள கைபேசி செயலிகளான ஹலோ, ஷேர் சாட் – ஆகியவற்றுக்கு ஷூலேஸ் போட்டியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
ஷூலேஸ் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பார்க்கும் போது மனிதர்களின் வாழ்க்கை முறைகளுக்கும், உணவு, விளையாட்டு போன்றவற்றுக்குள் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தளமாக இது இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
தேடு பொறிகளின் உலகில் தாதாவாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களின் சந்தையில் தொடர்ந்து தர்ம அடி வாங்கும் கூகுள் நிறுவனத்தின் தோல்வி முகத்தை ஷூலேஸ் சமூக வலைத்தளம் மாற்றுமா? – என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Discussion about this post