வட கொரியாவில் முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் எல்லையோர நகரமான கேசங்கில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வட கொரியாவில் இருந்து சட்டவிரோதமாக தென்கொரியாவுக்கு சென்று திரும்பிய நபருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் அந்நாட்டின் முதல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் எல்லையோர நகரமான கேசங்கில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 62 லட்சமாக உயர்ந்துள்ளது. உலகிலேயே கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் தொடர்கிறது. அமெரிக்காவில் ஒரே நாளில் 67 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 43 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டியது. கொரோனாவால் 1 லட்சத்து 49 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பிரேசிலில் ஒரே நாளில் ஆயிரத்து 111 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். புதிதாக 48 ஆயிரத்து 234 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 லட்சத்து 96 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலக அளவில் கொரோனாவுக்கு 6 லட்சத்து 48 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 99 லட்சத்து 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
Discussion about this post