ஜெர்மனி பிரதமர், 12 துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் கொண்ட குழுவினருடன், 3 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். முன்னதாக, டெல்லி வந்தடைந்த ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல்லை, இந்திய தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், குடியரசுத் தலைவர் மாளிகையில், பிரதமர் மோடி, ஏஞ்சலா மெர்கெலை வரவேற்றார். அங்கு அவருக்கு, சிவப்புக் கம்பள வரவேற்பும், அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
இந்த பயணத்தின் போது, பிரதமர் மோடியுடன், இரு தரப்பு உறவுகள் குறித்து ஏஞ்சலா மெர்கெல் ஆலோசனை நடத்தவுள்ளார். வேளாண்மை, பொருளாதார விவகாரங்களில் செயற்கை நுண்ணறிவுத்திறனை பயன்படுத்துவது உள்ளிட்ட 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளதாக, தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து, திறன் மேம்பாடு, சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் ஆலோசனைகள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன், 2015 ம் ஆண்டு ஏஞ்சலா மெர்கெல் இந்தியா வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.