ஈரோடு மாவட்டத்தில் விளையும் மஞ்சள் மத்திய அரசின் புவிசார் குறியீடு அந்தஸ்த்தை பெற்றுள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் விளையும் தனித்துவமான பொருளுக்கோ அல்லது பாரம்பரியமான முறையில் தயாரிக்கப்படும் பொருளுக்கோ பொதுவாக புவிசார் குறியீடு அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்த அந்தஸ்தின் மூலம் இதே பொருளை பிறர் தயாரிக்கவோ, காப்புரிமைக்கு விண்ணப்பிக்கவோ முடியாது. இதனால், ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வேண்டி ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மத்திய புவிசார் குறியீடு பதிவுத்துறைக்கு விண்ணப்பத்திருந்தார்கள்.
அந்த விண்ணப்பத்தில் கூறப்பட்டிருந்ததாவது:
ஈரோடு மஞ்சளானது சேர, சோழ, பாண்டியர் காலத்திலிருந்து விளைவிக்கப்படுகிறது. இது மருத்துவ குணம் மிக்கது. ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, சிவகிரி, அந்நியூர், சென்னம்பேட்டை, கோபிச்செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் அதிகமாக மஞ்சள் விளைவிக்கப்படுகிறது. ஆண்டுக்கு சுமார் 39 டன் மஞ்சள் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் 75% குடும்பங்கள் மஞ்சள் விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். எனவே ஈரோடு மஞ்சலுக்கு புவிசார் குறியீடு வழங்கவேண்டும்.
இதன் பின்னர், பல கலந்துரையாடல்கள், மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்ட புவிசார் குறியீடு பதிவுத்துறையினர் இவர்களின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு அந்தஸ்த்தை வழங்கியுள்ளனர். மேலும் மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கத்திற்கு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, காஞ்சிபுரம் பட்டு ,புதுக்கோட்டை நாச்சியார் கோவில் குத்துவிளக்கு, மதுரை மல்லிகைப்பூ இப்படி பல பொருட்கள் புவிசார் குறியீடு அந்தஸ்த்தைப் பெற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டில் விளையும் மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்குவது இதுவே முதல்முறையாக உள்ளது.
Discussion about this post