ஒடிசா மாநில ரசகுல்லாவிற்கு புவிசார் குறியீடு உரிமை வழங்கப்பட்டதற்கு, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். புவிசார் குறியீட்டிற்கான சட்டம் 2003ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் அதன் நிலப் பகுதிக்கேற்ப தனித்தனி பண்புகள் கொண்ட பொருட்களுக்கு அதன் தரத்தையோ, நன்மதிப்பையோ பொறுத்து புவிசார் குறியீடு வழங்கப்படும். இதுவரை 195 இந்தியப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரைத் தவிர மற்ற இடங்களில் தயாரித்து விற்க முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும்.
மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா இடையே முதலில் ரசகுல்லா எங்கே தோன்றியது? என்ற பிரச்சனை நீண்ட நாள் நீடித்து வந்த நிலையில் 2017- ஆம் ஆண்டு மேற்கு வங்காளம் புவிசார் குறியீடு அந்தஸ்துக்கு விண்ணப்பித்து ”வங்காள ரசகுல்லா” என்ற புவிசார் குறியீட்டை முதலில் பெற்றுவிட்டது. இந்நிலையில் தற்போது ” ஒடிசா ரசகுல்லா”வும் புவிசார் குறியீடு அந்தஸ்தை பெற்றுள்ளது. இந்த சான்றிதழ் 2028-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந் தேதிவரை செல்லும் என்று கூறப்படுகிறது. இதற்கு அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள புவிசார் குறியீட்டு பதிவாளர் அலுவலகம் தான் இதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post