சவுரவ் கங்குலி- இந்த பெயரை கேட்டாலே நாம் அனைவரும் சொல்லும் வார்த்தை இந்திய கிரிக்கெட்டின் “தாதா”. கிரிக்கெட்டின் பிதாமகன், கடவுள் என்று இருக்கும் போது “தாதா” என்ற வார்த்தை இருக்கக்கூடாதா என்ன?
விளையாட்டுகளில் வெற்றியோ, தோல்வியோ எது வேண்டுமானாலும் கிடைக்கலாம். ஆனால் விளையாடும் போது நம்முள் வெளிப்படும் உத்வேகம் தான், நம்மை மேலும் வெற்றியடைய செய்யும். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் கங்குலி. களத்தில் எதிரணிகளுக்கு சரியான பதிலடி கொடுப்பதில் இவரைப்போல் யாருமில்லை. அதனாலேயே இன்னும் அதே கெத்தோடு திகழ்கிறார் கங்குலி
1992ல் இந்திய அணிக்கு தேர்வான அவரின் ஆரம்ப கிரிக்கெட் பயணம் சரியாக அமையவில்லை. அதன்பின் நான்கு ஆண்டுகள் கழித்தே அவருக்கு அணியில் இடம் கிடைத்தது. அதுவும் டெஸ்ட் போட்டியில். 1996ம் ஆண்டு அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம்..அதுவும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில்…தொடர்ந்து அடுத்த இன்னிங்ஸில் சதம், அந்த தொடரில் சச்சினுடனான சிறந்த வெளிநாட்டு பார்ட்னர்ஷிப் என தனது வருகையை உலகத்துக்கே அறிவித்தார்.
கிரிக்கெட்டில் பந்து மைதானத்தின் மேற்கூரையிலையோ, வெளியவோ செல்வது எப்போதும் நடப்பதல்ல. அதிலும் ஒரு ஓவரின் மூன்று பந்துகளை மேலே அனுப்புவதெல்லாம் கங்குலிக்கே சாத்தியம். அதிலும் 2003 உலக்கோப்பையில் கென்யாவுக்கு எதிரான போட்டியில் 2 முறை வெளியவே சென்றது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
அவருக்கு “ஆஃப் சைட் கிங்” என்ற செல்லப்பெயர் உண்டு. ஆம்..ஆஃப் சைடில் எத்தனை பீல்டர்கள் நின்றாலும் அசால்ட்டாக பவுண்டரிக்கு அனுப்புவார் நம் “பெங்கால் டைகர்” கங்குலி.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் 3 சதங்கள், 1997 சஹாரா கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக 4 முறை ஆட்டநாயகன் விருதுகள், உலக்கோப்பை போட்டியில் அதிகப்பட்ச ரன் என பல சாதனைகள் படைத்தார். பந்து வீச்சிலும் பல முறை அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
2000ம் ஆண்டுகளில் இந்திய அணி வீரர்கள் மீது சூதாட்ட சர்ச்சை எழுந்தது. இக்கட்டான நேரத்தில் இந்திய அணியின் தலைமை பொறுப்பை ஏற்றார். அந்த சமயம் தரவரிசையில் 8வது இடம் இருந்தது இந்திய அணி. ஆனால் அத்தகைய அணியை 2003 உலக்கோப்பை இறுதிப்போட்டி வரை இழுத்து சென்றார் கங்குலி.
தொடர்ச்சியாக 16 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவிற்கு 2001ம் ஆண்டு இவர் தலைமையிலான அணி எண்ட் கார்டு போட்டது.
கங்குலியை உலகில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் இங்கிலாந்து மட்டும் என்றென்றைக்கும் மறக்காது. 2002 நாட்வெஸ்ட் தொடரில் கிரிக்கெட்டின் மெக்காவான லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணியின் வெற்றியை சட்டையை கழற்றி வெறித்தனமான கிரிக்கெட் ரசிகனைப் போல் கொண்டாடினார்.
எந்த அணியெல்லாம் ராஜாவாக திகழ்ந்ததோ அதையெல்லாம் அவர்களின் சொந்த மண்ணிலேயே துவம்சம் செய்தது. கங்குலி தலைமையிலான அணி.
2005க்கு பிறகு அவருக்கு சோதனைக்காலமாகவே ஆரம்பித்தது. முன்னாள் பயிற்சியாளர் சேப்பலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் பல சர்ச்சைகளில் சிக்கி அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். பின் 2008ல் ஓய்வு பெற்றார். அவரது கடைசி போட்டியின் போது இந்திய அணிக்கு தற்காலிக கேப்டன் தோனி. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய கங்குலியை சில ஓவர்கள் கேப்டனாக இருக்கும்படி தோனி கூற, அதன்படி கேப்டனாக சில நிமிடங்கள் விளையாடினார் கங்குலி. அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற, வெற்றி கேப்டனாகவே கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார்.
அதன்பின் ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்கு ஆடினார். அதிலும் 2011 ஏலத்தில் சொந்த ஊர் அணியில் இடம் கொடுக்கப்படவில்லை. இதனால் “NO DADA NO KKR” என ரசிகர்கள் கொல்கத்தா போட்டிகளை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றாலும் கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வருகிறார் கங்குலி. அதுமட்டுமல்லாமல் பயிற்சியாளர், ஆலோசகர், பிசிசிஐ நிர்வாகி என பல பரிணாமங்களில் அவர் கிரிக்கெட்டோடு தன்னை தொடர்புபடுத்தி கொண்டார்.
மற்றவர்களின் விருப்பு, வெறுப்புகளை சரிபாதியாக பெற்ற இந்த “கொல்கத்தா பிரின்ஸ்” இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தாதா….!
Discussion about this post