விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. மூன்றாம் நாளான நேற்று விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, விக்கிரவாண்டி, திண்டிவனம், செஞ்சி, திருக்கோவிலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.
மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் வெள்ளி கடற்கரையில் பாதுகாப்பாக கரைக்கப்பட்டன. ஊர்வலத்தை முன்னிட்டு விழுப்புரம் நகரம் முழுவதும் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதேபோல், மதுரையில் 225 விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு வைகையாற்றில் கரைக்கப்பட்டன. கீழமாசி வீதியில் தொடங்கிய விநாயகர் சிலை ஊர்வலம் தெற்கு மாசி வீதி, மேலமாசி வீதி, சிம்மக்கல் ஆகிய இடங்கள் வழியாக கொண்டு செல்லப்பட்டது. பேச்சியம்மன் படித்துறையில் உள்ள வைகையாற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம், துடியலூர், கோவில்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலை ஊர்வலத்தை ஒட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.