ஈரோட்டில் உள்ள பவானி ஆற்றில் 17 விநாயகர் சிலைகள் பலத்த காவல் துறையினரின் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பவானி அருகேயுள்ள அத்தாணி பகுதியில் 17 சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், அனைத்து சிலைகளும் வளையபாளையம் மாரியம்மன் கோவிலிருந்து ஊர்வலமாக சென்று கோபி, அந்தியூர், சத்தியமங்கலம் வழியாக சென்று பவானி ஆற்றில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பலத்த காவல் துறையினரின் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதே போல் கோவை மாநகரப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 700க்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்பட்டன. கோவை மாவட்டத்தில் பல்வேறு அமைப்பினர் சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளுக்குக் கடந்த 5 நாட்களாக சிறப்பான பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்ற பக்தர்கள் அவற்றைக் குளத்தில் கரைத்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டியில் 40க்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுத் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரியில் தண்ணீரில் கரைக்கப்பட்டன. முன்னெச்சரிக்கையாகத் தகாத நிகழ்வுகள் ஏதும் நிகழாமல் இருக்கக் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மரக்காணம் கடற்கரையில் கரைக்கப்பட்டன.
Discussion about this post