கஜா புயல் நிவாரண பணிகளுக்கு ஆயிரத்து 401 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கஜா புயல் பாதிப்புகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க கோரியும், தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
புயல் தாக்குவதற்கு முன்பே அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், புயல் கரையை கடந்த பிறகு, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முழு வீச்சில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவாரண பணிகளுக்காக ஆயிரத்து 401 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சமும், மாடு, எருமைகளுக்கு 30 ஆயிரமும், ஆடுகளுக்கு 3 ஆயிரமும் அறிவிக்கப்பட்டு இருப்பதை தமிழக அரசு சுட்டிக் காட்டியுள்ளது.
படகுகளை இழந்த மீனவர்களுக்கு 5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படுவதாகவும், மத்திய அரசு சார்பில் நிவாரணத் தொகையாக 353 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Discussion about this post