தமிழகத்தை அச்சுறுத்தி வந்த கஜா புயல், நாகை – வேதாரண்யம் இடையே இன்று அதிகாலை மூன்று முப்பது மணி அளவில் கரையை கடந்தது.
புயலின் மையப்பகுதி கரையை கடந்த நிலையில், நாகை, வேதாரண்யம் பகுதிகளில் அதிகபட்சமாக 111 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. இதனால், பல இடங்களில் மரங்கள் சாய்ந்தும், வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தும் உள்ளன. கஜா புயல் முன்னெச்சரிக்கையாக நாகை மாவட்டத்தில் 26 கிராமங்களிலும், திருவாரூர், கடலூர், தஞ்சை, காரைக்கால் மாவட்டங்களிலும் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. எனினும், மீட்புப் பணிகள் இரவே தொடங்கி நடைபெற்று வருகிறது. பல இடங்களில் தொலை தொடர்பும் பாதிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடந்த நிலையில், வேதாரண்யம், தஞ்சை, கும்பகோணம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. புயல் காரணமாக, 6 மாவட்டங்களில் 81 ஆயிரம் பேர், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயலின் கண்பகுதி கரையை கடந்து சென்றதால், எதிர் திசையில் இருந்து பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கண்பகுதி கரையை கடந்து விட்டாலும், புயல் வலுவிழக்க 6 மணி நேரம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post