முதலமைச்சரின் அடுத்த பயணம் முதல் தமிழகம் வரை முழு ரிப்போர்ட்

தமிழகத்தின் தொழில்முன்னேற்றத்துக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.

தமிழகத்தின் சுகாதாரத்துறையை மேம்படுத்தவும், தொழில்துறையில் முதலீடுகளை ஈர்க்கவும் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்குப் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளார்.

தனது பயணத்தின் இரண்டாவது கட்டமாக நேற்று இரவு இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டு இன்று நியூயார்க் சென்றடைகிறார். அங்கு அமெரிக்கத் தமிழ்த் தொழில்முனைவோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்கத் தொழில்முனைவோர் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்திக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமெரிக்கவாழ் தமிழ் மக்களிடமும் கலந்துரையாட உள்ளார்.

சான் ஹுசெவில் அமெரிக்கத் தமிழ்த் தொழில்முனைவோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்கத் தொழில்முனைவோர் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்திக்க உள்ளார். நியூயார்க் தொழில் முதலீட்டாளர்கள், தமிழகத்தில் தொழிற்சாலைகளை நடத்தி வரும் கேட்டர்பில்லர், ஃபோர்டு நிறுவனங்களின் உயர் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசுகிறார்.

சான்பிரான்சிஸ்கோ நகரில் ஃபாக்ஸ்கான், லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளையும், தொழில்முதலீட்டாளர்களையும் சந்தித்து உரையாற்றுகிறார்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்பட உள்ள உலகத்தரம் வாய்ந்த கால்நடைப் பூங்காவுக்குத் தேவைப்படும் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்வதற்காக, பஃபல்லோ மற்றும் கலிபோர்னியாவில் உள்ள கால்நடைப் பண்ணைகளைப் பார்வையிட உள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரியாற்றலை மின்கட்டமைப்பில் எளிய முறையில் சேர்ப்பது தொடர்பான தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ளும் வகையில் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ப்ளூம் எனர்ஜி நிறுவனத்தையும் பார்வையிடுகிறார்.

அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பும் வழியில் செப்டம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் துபாயில் பிசினஸ் லீடர்ஸ் ஃபோரம், இந்தியத் துணைத்தூதரகம் ஆகியவை இணைந்து நடத்தும் தொழில்முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். துபாயில் உள்ள தொழில்முனைவோர்களிடம் தமிழகத்தில் தொழில்தொடங்க அழைப்பு விடுக்கும் வகையில் ஒரு கூட்டம் நடத்த உள்ளார். செப்டம்பர் பத்தாம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் திரும்புகிறார்.

Exit mobile version