சட்ட விரோதமாக கப்பலில் தூத்துக்குடி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப்பிடம், குடியுரிமை மற்றும் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் இருந்து கடந்த மாதம் 11ஆம் தேதி கட்டுமான பொருட்களை ஏற்றிக் கொண்டு விர்கோ 9 என்ற சிறிய ரக சரக்கு கப்பல் மாலத்தீவு சென்றது. அந்த சரக்கு கப்பலில் 9 பேர் இருந்தனர். தூத்துக்குடிக்கு திரும்பி வந்த போது, கப்பலில் 10 இருந்தது தெரியவந்தது. விசாரணையில் கப்பல் நடுக்கடலில் நின்றதும், அப்போது அதில் ஒருவர் ஏறி பயணம் செய்து தூத்துக்குடி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 10-வது நபராக தூத்துக்குடிக்கு வந்தவர், மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் என்பது தெரியவந்துள்ளது. சட்ட விரோதமாக கப்பலில் தப்பி வந்த அகமது அதீப்பிடம் விசாரணை நடத்த வெளிநாடுகளின் குடியுரிமை மண்டல பதிவுத்துறை அலுவலர் சேவியர் தன்ராஜ் தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். இதேபோல், மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். மாலத்தீவின் அப்போதைய அதிபர் அப்துல்லாவை கொல்ல முயன்ற வழக்கில், துணை அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அகமது அதீப் சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.