ஏழை குடும்பத்தில் பிறந்த காமராஜர், வறுமை காரணமாக ஆறாவதுடன் படிப்பை கைவிடும் நிலை ஏற்பட்டது. பின்னர் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்து, அரசியலில் நுழைந்து, முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காமராஜர் தன் வாழ்க்கை அனுபவத்தால் அனைவரும் கல்வி பயில வேண்டும் என்பதை தனது ஆட்சியின் மிகப் பெரிய லட்சியமாகக் கொண்டு கல்வித்
துறையில் பல புரட்சிகரமான திட்டங்களை கொண்டு வந்தவர்.
ஆரம்பப் பள்ளிகளின் எண்ணிக்கையை உயர்த்த முடிவு செய்து 21 ஆயிரத்து 500ஆக இருந்த ஆரம்பப் பள்ளிகளின் எண்ணிக்கையை 30 ஆயிரத்திற்கும் மேலாக உயர்த்தினார். பள்ளி இல்லாத கிராமமே இருக்கக்கூடாது என்று எண்ணி தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களிலும் ஒரு மைல் சுற்றளவில் பள்ளிக் கூடங்களை ஏற்படுத்தினார்.
குடும்ப வறுமையால் படிக்கும் வாய்ப்பை இழந்து விடக்கூடாது என்று எண்ணி, பத்தாவது வரை அனைத்து குழந்தைகளும் படிக்க வேண்டும் என்பதற்காக 1962-ஆம் ஆண்டு இலவசக் கல்வித்திட்டத்தை உருவாக்கினார்.
இதன் விளைவாகப் பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.
பசியுடன் எந்த குழந்தையும் இருக்கக் கூடாது என்பதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் இலவச மதிய உணவுத் திட்டத்தை தொடங்கினார்.
ஆரம்பக் கல்வியின் வளர்ச்சிக்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கு சிறிதும் குறையாமல், உயர்நிலைக் கல்வியிலும் காமராஜர் ஆர்வம் காட்டினார்.
மாணவர்களும், பொதுமக்களும் நூல்களைப் படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாட்டில் பொது நூலகச் சட்டத்தை இயற்றினார். 1953-ல் ஒரே ஒரு கிளை நூலகம் மட்டும்தான் இருந்தது. மக்களின் அறிவு வளச்சியைக் கருத்தில் கொண்டு 1961-ல் 454 கிளை நூலகங்களை காமராஜர் ஏற்படுத்தினார்.
இப்படி கல்வியில் பல்வேறு புரட்சியை கொண்டு வந்த காமராஜரை, வருங்கால சந்ததிகளுக்கு நினைவு கூறவும், பெருமையை போற்றும் விதமாகவும் அவரது பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
Discussion about this post