உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 74.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் காலத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர் பி.ஹெச்.பாண்டியன். உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று காலை 9 மணிக்கு காலமானார்.
நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி, கோவிந்தப்பேரி என்ற ஊரில் பிறந்த பி.ஹெச்.பாண்டியன் சட்டப் படிப்பை முடித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். எம்ஜிஆர், அதிமுக-வைத் தொடங்கியபோது, கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட பி.ஹெச்.பாண்டியன், தனது கடின உழைப்பின் காரணமாக கட்சியில் படிப்படியாக வளர்ச்சி அடைந்தார்.
1977, 1980, 1984 மற்றும் 1989-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வான, பி.ஹெச்.பாண்டியன், 1982 முதல் 1985-ம் ஆண்டுவரை துணை சபாநாயகராக பணியாற்றினார். அதன்பிறகு, 1985-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டுவரை தமிழக சட்டமன்ற சபாநாயகராக தனது பணியைத் திறம்படச் செய்தவர். சபாநாயகர் வானளாவிய அதிகாரம் படைத்தவர் என்று அந்த நேரத்தில் பி.ஹெச்.பாண்டியன் பேசிய வார்த்தைகள் மிகப் பிரபலம். 1999-ம் ஆண்டு அ.தி.மு.க சார்பில் நெல்லை மக்களவைத் தொகுதிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க-வில் அமைப்புச் செயலாளராகவும் பதவி வகித்த பி.ஹெச்.பாண்டியன், தன் வழக்கறிஞர் பணியையும் தன் கடைசி மூச்சு வரை திறம்பட செய்துவந்தார். கடந்தாண்டு காலமான பி.ஹெச்.பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியன், மற்றும் அவரது மகன்கள் மனோஜ் பாண்டியன், அரவிந்த் பாண்டியன், வினோத் பாண்டியன் என பி.ஹெச்.பாண்டியனின் மொத்த குடும்பமும் அதிமுக-வின் வளர்ச்சிக்கு பாடுபட்ட குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது. பி.ஹெச்.பாண்டியனின் மறைவுக்கு அதிமுகவினர், தமிழக அமைச்சர்கள் உள்பட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.