முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 84.
மூளையில் ஏற்பட்ட ரத்தக்கட்டுக்கு சிகிச்சை பெற ஆகஸ்ட் 10 ஆம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பிரணாப் முகர்ஜி அனுமதிக்கப்பட்டார். அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை நடைபெற்று ரத்தக்கட்டு அகற்றப்பட்ட நிலையில், அவர் ஆழ்ந்த கோமாவில் இருந்து வந்தார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி அவர் காலமானதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி ட்விட்டர் வாயிலாக அறிவித்தார். கடந்த 1935 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி மேற்குவங்க மாநிலம் மிரிதியில் பிறந்த பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் மூத்த தலைவராக திகழ்ந்தார். கடந்த 2012 முதல் 2017 வரை குடியரசுத் தலைவராக பதவி வகித்த பிரணாப் முகர்ஜிக்கு, கடந்த ஆண்டு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.
பிரணாப் முகர்ஜியின் மறைவால் நாடே சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியவர் என்ற பெருமையை கொண்ட பிரணாப் முகர்ஜி, அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்பட்டவர் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post