கமுதி அருகே வாக்குச்சாவடி ஒன்றில், தேர்தல் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்த திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கும், கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பாக்குவெட்டி 10வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேலின் அக்கா ஜான்சிராணி என்பவர் போட்டியிட்டார். இந்நிலையில், கருங்குளம் வாக்குசாவடிக்கு வந்த திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல், அங்கிருந்த தேர்தல் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தார். இதனால் கருங்குளம் கிராம மக்களுக்கும், முருகவேல் மற்றும் அவருடைய ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த முதுகுளத்தூர் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் தலைமையிலான காவல்துறையினர், வாக்குவாதத்தில் ஈடுபட்ட முருகவேல் மற்றும் அவரது ஆதரவாளர்களை வெளியேற்றினர். திமுகவினரின் இந்த செயலால் கருங்குளம் வாக்குச்சாவடியில் அரைமணி நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.