ஈரான் தாக்குதலில் அமெரிக்க படை வீரர்கள் 80 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இரண்டு நாடுகளும் தங்கள் படைகளை ஆயத்த நிலையில் இருக்க உத்தரவிட்டு உள்ளன.
அமெரிக்கா – ஈரான் நாடுகளிடையே போர் மூளுமோ? – என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், உலக நாடுகளின் ஆயுத பலத்தைக் கண்காணித்துவரும் ‘குளோபல் ஃபயர் பவர்’ – என்ற அமைப்பானது, இந்த இரு நாடுகளின் இராணுவ பலத்தை குறித்து வெளியிட்ட தகவல்களைக் கொண்டு பல்வேறு ஊடகங்களும் ஒப்பிட்டு செய்தி வெளியிட்டு வருகின்றன. அந்த தகவல்களின் படி, உலகில் ஒருங்கிணைக்கப்பட்ட உறுதியான இராணுவம் உள்ள 137 நாடுகளின் பட்டியலில், அமெரிக்காவே முதலாவது இடத்தில் உள்ளது. அதே சமயம் ஈரான் 14ஆவது இடத்தில் உள்ளது.
படை வீரர்களின் எண்ணிக்கையைப் பொருத்தவரை, அமெரிக்க இராணுவத்தில் மொத்தம் 12 லட்சத்து 81 ஆயிரத்து 900 பேர் தற்போது பணியாற்றி வருகின்றனர். அமெரிக்க இராணுவத்தால் அதன் ஆள் பலத்தை, 14 கோடியே 48 லட்சத்து 72 ஆயிரத்து 845 பேர் வரை அதிகரிக்க முடியும். ஈரான் இராணுவத்திலோ தற்போது மொத்தம் 5 லட்சத்து 23 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். ஈரானால் அதன் ஆள் பலத்தை 4கோடியே 73 லட்சத்து 24 ஆயிரத்து 105 பேர் வரை அதிகரிக்க முடியும்.
தரைப்படையில், பீரங்கிகள், போர் வாகனங்கள், கவச வகனங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை அமெரிக்க இராணுவத்தைப் பொருத்தவரை 48ஆயிரத்து 422ஆக உள்ளது. ஈரானில் இவற்றின் எண்ணிக்கை 8ஆயிரத்து 577ஆக உள்ளது. கடல்படையில், கப்பல்கள், நீர்மூழ்கிகள், ஆயுதம் தாங்கிக் கப்பல்கள் ஆகியவை அமெரிக்காவிடம் மொத்தம் 415 உள்ளன, ஈரானிடமோ அவை மொத்தம் 398 உள்ளன.
வான்படையில் இராணுவ விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் எண்ணிக்கையைப் பொருத்தவரை, அமெரிக்காவிடம் அவை 10 ஆயிரத்து 170 உள்ளன. ஈரானிடம் அவை 512தான் உள்ளன. பயன்பாட்டில் உள்ள ஏவுகணைகளைப் பொருத்தவரை அமெரிக்க இராணுவத்திடம் தற்போது 7 வகை ஏவுகணைகள் உள்ளன, ஈரானிடம் 12 வகை ஏவுகணைகள் உள்ளன. இதில் அமெரிக்க ஏவுகணைகளின் ஆற்றல் ஈரானின் ஏவுகணைகளின் ஆற்றலைவிடவும் மிக அதிகம் என்பதோடு, இன்னும் பல ஏவுகணைகளை அமெரிக்காவால் இராணுவத்தில் அறிமுகப்படுத்தவும் முடியும்.
இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டைப் பொருத்தவரை, அமெரிக்க இராணுவத்திற்கான ஆண்டு நிதி ஒதுக்கீடு 716 பில்லியன் டாலர்களாக உள்ளது. இந்திய மதிப்பில் இது 51 லட்சம் கோடி ரூபாய்க்கு சமமான தொகை ஆகும், ஈரானின் இராணுவ நிதி ஒதுக்கீடோ, ஆண்டுக்கு 6.3 பில்லியன் டாலர்களாக உள்ளது, இந்திய மதிப்பில் இது 45 ஆயிரம் கோடிக்கு சமமான தொகை ஆகும்.
இதனால் ஒருவேளை அமெரிக்கா, ஈரான் நாடுகளிடையே போர் ஏற்பட்டால் ஈரான் வெற்றி பெற எந்த வாய்ப்பும் இல்லை. ஆனால் அமெரிக்காவிற்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்த ஈரானால் முடியும், மேலும் ஈரான் பல்வேறு நாடுகளுடன் நட்புறவில் உள்ள நாடு என்பதால், அமெரிக்காவிற்கு வேறு வகைகளிலும் இழப்புகள் ஏற்படக் கூடும் என்று கணிக்கப்படுகின்றது.
போரில் எந்த நாடு வென்றாலும் சரி, எந்த நாடு தோற்றாலும் சரி, இரண்டு நாடுகளுமே பாதிக்கப்படும் என்பதால் இந்த இரு நாடுகள் போரில் ஈடுபடக் கூடாது என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பாகவும், அறிவுரையாகவும் உள்ளது.
Discussion about this post