கொரோனா தொற்று தடுப்புப் பணிகளுக்காக 64 கோடியே 26 லட்சம் ரூபாயை பல்வேறு துறைகளுக்கு விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த தொகையை, சென்னை மாநகராட்சி, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை போன்ற துறைகளுக்கு விடுவித்து, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதன் படி, சென்னை மாநகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறைக்கு தலா 20 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. 5 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 21 நாட்களுக்கு உணவு வழங்கியதற்காக 8 கோடியே 34 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை மற்றும் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறைக்கு 15 கோடியே 92 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறைக்கு 20 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு உள்ளது. முகக்கவசங்கள், கிருமிநாசினி, கிருமிநாசினி தெளிக்கும் நபர்கள், ஸ்ப்ரேயர்கள், டிராக்டர்கள், கூடுதல் கவச உடைகள், கை கழுவும் கருவிகள், லைசால், சோப்பு, கட்டுப்பாட்டு அறை, ரோந்துப் பணிகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post