ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமின் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடு திரட்டியதில் உள்ள விதிமீறல்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கப் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவர் மகன் கார்த்தி ஆகியோர் மீது சிபிஐயும் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி ஐதராபாத்தில் தங்கித் தனது குடும்ப மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதற்காக இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் எனக் கோரிச் சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்துச் சிதம்பரத்தின் உடல்நிலையை ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர் தங்களின் அறிக்கையை டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழங்கினர். அதில் சிதம்பரத்துக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை இல்லை எனவும், அதே நேரத்தில் நல்ல இடவசதியுடன் சுகாதாரமான சூழ்நிலையில் இருக்கும் வசதியைச் செய்துகொடுக்க வேண்டும் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் சிதம்பரத்தின் இடைக்கால ஜாமின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, அவருக்குக் கொசுவலை, பாட்டில் குடிநீர், காற்றுமாசை வடிகட்டும் முகமூடி ஆகியவற்றை வழங்கச் சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.
Discussion about this post