ஹாரி பாட்டர் படத்தில் இடம்பெறும் ஒரு மந்திர விளையாட்டை அடிப்படையாக கொண்டு விளையாடப்படும் குயிடிட்ச் என்னும் வினோத விளையாட்டுக்கு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் உலக கோப்பை தொடரே நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பலராலும் அறியப்படாத இந்த விளையாட்டு குறித்த ஒரு சிறப்பு தொகுப்பு
பிரபலமான ஹாரி பாட்டர் புத்தகத் தொடரில் விவரிக்கப்பட்ட ஒரு மாய விளையாட்டை அடிப்படையாக கொண்டது இந்த குயிடிட்ச் விளையாட்டு. இந்த விளையாட்டை ஹாரி பாட்டர் படம் காட்சிகளாக நம் கண் முன் நிறுத்தியது. பறக்கும் மந்திர சக்தி கொண்ட துடைப்பத்தை கால்களுக்கு இடையே வைத்துக் கொண்டு எதிரணியின் வளையத்திற்குள் கோல் போடுவதே இதன் நோக்கமாகும். இதன் விளையாட்டின் விதிமுறைகள் பல சுவாரஸ்யங்களை கொண்டவை.
இரு அணிகளாக மோதிக்கொள்ளும் குயிடிட்ச் விளையாட்டில் ஒரு அணிக்கு 7 வீரர்கள் இடம்பெற்றிருப்பர். இரு அணி வீரர்களுக்கும் தனித்தனியாக குறிப்பிட்ட நிறத்திலான பந்தும், கோல் போடுவதற்கு வேறொரு வண்ணத்திலான பந்தும் கொடுக்கப்படும். வீரர்கள் கால்களுக்குள் இருந்து துடைப்பத்தை எடுத்தாலோ அல்லது மற்றவரின் துடைப்பத்தை தடுத்தாலோ ஃபவுல் கொடுக்கப்படும். மேலும், ஒரே நேரத்தில் ஒருவர் இரு பந்தை வைத்திருந்தாலும் ஃபவுல் கொடுக்கப்படும் இலக்கை நோக்கி கோல் போட முன்னேறும் வீரர்களை எதிரணி வீரர்கள் கையில் வைத்திருக்கும் மற்றொரு பந்தால் அடித்தால் அந்த வீரர் பந்தை அங்கேயே போட்டுவிட வேண்டும். அவ்வாறு ஃபவுல் கொடுக்கப்படும் வீரர்கள் அந்த அணியின் கோல் போஸ்டிற்கு திரும்பி சென்ற பிறகே மீண்டும் இலக்கை நோக்கி முன்னேற வேண்டும். ஆண், பெண் என இரு பாலரும் கலந்து விளையாடும் இந்த விளையாட்டு முதன் முதலில் அமெரிக்க கல்லூரிகளில் தொடங்கியது. இதன் பின்னர் படிப்படியாக பிற நாடுகளிலும் பரவியது.
தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கும் குயிடிட்ச் விளையாட்டு பரவியுள்ள நிலையில், இதனை வைத்து வீடியோ கேம்களும் விளையாடப்படுகிறது. இதற்காக உலக கோப்பை போட்டிகளும் நடத்தப்பட்டு வரும் நிலையில், கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பையில், அமெரிக்க அணி பெல்ஜியத்தை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றது. இதில் கலந்து கொள்ளும் வீரர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களையும் உற்சாகமாக்கும் குயிடிட்ச் விளையாட்டுக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த சுவாரஸ்யமான விளையாட்டு நமது நாட்டிற்குள் வர இன்னும் சில காலம் பிடிக்கும் என்பதே பலரின் கூற்றாக உள்ளது.
Discussion about this post