வறுமையின் பிடியில் இருந்த ஓமனை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் சென்றவரும் அனைத்து மதத்தவருக்கும் வழிபாடு உரிமை வழங்கிய ஓமான் அரசர் காஃபூஸ் பின் செய்த் காலமானார். அவர் செய்த சாதனை என்ன ?
அரபு நாடுகளின் மன்னர்கள் அதிக அதிகாரம் கொண்டு சாதாரண மனிதர்கள் நெருங்கக் கூட முடியாத வகையில் படை பலத்துடன் இருப்பர். அவர்கள் மத்தியில் மக்களோடு மக்களாக வாழ்ந்து காட்டியவர் ஓமான் சுல்தான் காஃபூஸ் பின் செய்த். அரசன் என்ற தோரணையோ, மமதையோ இல்லாமல் மக்களுடன் கலந்து இருந்த அவர் இஸ்லாத்தின் கோட்பாடான “உன் மதம் உனக்கு, என மதம் எனக்கு” என்ற சமய நல்லிணக்கத்தை தீவிரமாக கடைபிடித்தவர்.
சிறு வயதில் இந்தியாவில் தங்கிப் படித்த காஃபூஸ் பின் செய்த் முன்னாள் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. குடியரசுத் தலைவரான பின்னர் ஓமன் சென்ற சங்கர் தயாள் சர்மாவை காரில் அமர வைத்து அவரே காரை ஓட்டிச் சென்றார்.
அரபு நாடுகளில் மாற்று மதத்தவரின் வழிபாட்டு உரிமைகளுக்கு அனுமதியில்லை என்ற மரபையும் முதலில் உடைத்தவர் காஃபூஸ் பின் செய்த் தான். ஹிந்து மதத்தவருக்கான கோயில்களும் , கிறிஸ்தவர்கள் சர்ச்சுகளும் கட்டிக்கொள்ள அனுமதியளித்தார். ஓமனுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி சிவன் கோயிலில் வழிபாடு நடத்தியது நினைவுகூரத்தக்கது. மேலும் ஹிந்துக்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி இறுதி சடங்குகளை செய்வதற்கு Sohar என்னுமிடத்தில் தனியாக மயானம் அமைத்துக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எண்ணெய் வளம் மிகுந்து காணப்படும் ஓமனில் 1970ம் ஆண்டு வரை போதுமான குடிநீர் சாலை வசதிகள் இல்லை . ஐம்பது வருடங்களில் தன்னுடைய கடின உழைப்பால் வறுமையின் கோரப்பிடியில் இருந்து நாட்டை மீட்டார் காஃபூஸ் பின் செய்த். எண்ணெய் வளத்தை சரியாகப் பயன்படுத்தி நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். புதிய சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் அமைக்கப்பட்டன. மேலும் ஓமனின் முப்படைகளும் வலிமைப்படுத்தப்பட்டன. கல்வி, சுகாதாரம், மருத்துவம் என அனைத்து துறைகளிலும் இன்று ஓமன் முன்னணியில் இருக்கிறது. ட்ரகோமா எனும் பரவும் நோயை ஒழித்த முதல் நாடாக ஒமான் உள்ளது.
வளைகுடா போர்களின் போதும், தற்போது அரபு நாடுகள் சந்தித்து வரும் போர்களிலும் மக்களுக்கு உதவி செய்யும் முதல் நாடாக ஓமன் உள்ளது. கேரள வெள்ளத்தின் போது கூட பெருமளவு நிவாரணப் பொருட்களை ஓமன் அனுப்பி வைத்தது. மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அந்நாட்டின் நலனுக்கு உழைத்த ஹிம்ஜி ராம்தாஸ் என்பவருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கினார் ஓமன் அரசர். இன்று ஹிம்ஜி ராம்தாஸ் நிறுவனம் சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.
இந்தியாவுடன் இணக்கமாக உறவை கடைபிடித்து வந்த அவரின் மறைவு ஓமன் நாட்டு மக்களுக்கு எந்த அளவு இழப்பை ஏற்படுத்தியதோ அதே அளவு இந்தியர்களுக்கும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுப்பதற்கில்லை.
Discussion about this post