நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை விழாவின் முக்கிய நிகழ்வான மலர் கண்காட்சியை அரசினர் தாவிரவியல் பூங்காவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்.
உதகையில் ஆண்டுதோறும் கோடை விழாவின் முக்கிய நிகழ்வாக மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த ஆண்டு மலர் கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று துவக்கி வைத்துள்ளார். 5 நாட்கள் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியின் துவக்க விழாவில் வேளாண்மைத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, தோட்டக் கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்குநர் சுப்பையன், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தக் கண்காட்சியையொட்டி, சுமார் ஒன்றரை லட்சம் கார்னேஷன் மலர்களால் நாடாளுமன்றக் கட்டடத்தின் தோற்றம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல, 10 ஆயிரம் லில்லியம், ஆர்க்டிக் மலர்களைக் கொண்டு மலர்க்கூடை, கண்ணாடி மாளிகை, 5 ஆயிரம் மலர் தொட்டிகளால் பிரமாண்ட மலர் வடிவம் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளன.
அதேபோல, பூங்காவிலுள்ள மலர் பாத்திகளில் இன்கா மெரிகோல்டு, பிரெஞ்சு மெரிகோல்டு, பிளாக்ஸ், பெட்டூனியா, சால்வியா, பிகோனியா, ஆஸ்டர், பால்சம், ஓரியண்டல் லில்லி, கிரசாந்திமம், சினரேரியா, கிளாக்சோனியா உள்ளிட்ட வெளிநாட்டு மலர் ரகங்களுடன் அரிய வகை மலர் ரகங்களான ரெனன்குலஸ், டியூப்ரஸ் பிகோனியா, பாயின் சிட்டியா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட மலர் ரகங்கள் இடம் பெற்றுள்ளன.
கண்காட்சியையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு நிறைவு நாளான வரும் 21ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்குகிறார். மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.