இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று மீனவர் கார்சன் காணாமல்போன நிலையில், இலங்கை யாழ்ப்பாணத்தில் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டம், அல்லைப்பிட்டி வெண்புரவி கடற்பகுதியில் இன்று கரையொதுங்கிய சடலத்தை ஊர்காவல்துறை பகுதியின் இலங்கை காவல்துறையினர் கைப்பற்றினர். குறிப்பிட்ட சடலம் யாருடையது என்பதை உறுதிப்படுத்தும் விசாரணையில் அந்நாட்டு காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, கடந்த செப்-30ஆம் தேதி இராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 550-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். அதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த தனிக்கிளாஸ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற இன்னாசி, ஜோகன், இனஸ்கோ, இம்மானுவேல், கார்சன், சுவித்து ஆகியோர் அன்று இரவு கச்சத்தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென கடலில் சீற்றம் ஏற்பட்டு, கார்சன் படகிலிருந்து நிலைதடுமாறி கடலில் விழுந்துள்ளார். சக மீனவர்கள் இரவு முழுவதும் அப்பகுதியில் தேடியும், கார்சன் கிடைக்கவில்லை. அதையடுத்து, இந்திய கடலோர காவல்படைக்கு தெரிவிக்கப்பட்டு, தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டது. மீனவர் கார்சனின் உறவினர்கள் உதவியுடன் 13 பேர் கொண்ட கடலோரக் காவல்துறையினரும் 5 நாள்களாகத் தேடிவந்தனர்.
இந்நிலையில் இன்று மதியம் இலங்கை, யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி கடலோரப் பகுதியில் ஒருவரின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. அது கார்சன்தானா என இலங்கையின் ஊர்காவல்துறை காவல்துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
Discussion about this post