கொடுக்குற தெய்வம் கூரையப்பிச்சிக்கிட்டா கொடுக்கும்” என்கிற பழஞ்சொலவடைகள் கேள்விப்பட்டதுண்டா?. ஒருவீட்டுக்கு கொடுக்க வேண்டுமென்றால் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கலாம். ஒரு ஊருக்கே கொடுக்க வேண்டுமென்றால் அதற்கு வானம்தான் கூரை. ஆம் வானம் கிழிந்து எல்லாம் கீழெ வந்துவிழுந்தால் விழுந்தவை என்னென்னவாக இருக்கும். கொஞ்சம் நல்ல மெத்மெத்தென்ற பஞ்சுமேகம், ஜில்லென்ற தண்ணீர், முப்பத்து முக்கோடி கிரண,கிம்புருட, தேவ,அசுரர்கள். கண்ணுக்குமுன்னே ரோட்டில் கைலாய எஃபெக்ட் என இத்யாதி இத்யாதிகளாக இன்னும் என்னென்னவெல்லாமோ வரலாம்.
ஆனால் இங்கே மீன் வந்திருக்கிறது. அப்படியா மீன் கூட வருமா?அப்படியென்றால் மேலோகத்தில் மீனின் பயன்பாடு என்ன?ஆண்டவனே அசைவம் சாப்பிடுகிறானா? என்ன இது புதுக்கதை என்றெல்லாம் குழப்ப வேண்டாம். புதுக்கதை எல்லாம் இல்லை. இது ரொம்பப் பழைய கதை. இப்போது ஆந்திராவில் பெய்திருக்கும் மீன் மழையால் புதுப்பிக்கப்பட்ட கதை.
அப்படியென்றால் இது எப்படிச்சாத்தியம். பறவைகள் விழுந்தால் கூட எதோ வானத்தில் பறந்தபோது மேகத்தில் மாட்டிக்கொண்டு இப்போது விழுந்திருக்கிறது என்று நமக்குநாமே கதை கட்டிக்கொள்ளலாம். ஆனால் பறக்கவும் முடியாத, இவைகள் எப்படி வானத்தில் இருந்து விழுகின்றன. முதலில் எப்படி மேலே பொயின எல்லாம்.
இவை மட்டுமல்ல என்னென்னவோ விழுந்திருக்கின்றன. எங்கிருந்து வருகின்றன. எப்படி நடக்கிறது. பார்க்கலாமா??
1861 ம் ஆண்டு சிங்கப்பூரில் பெய்ததுதான் நீண்டநேரம் பெய்த விலங்குமழை என்கிறார்கள் ஆய்வாளர்கள். அப்படியென்றால் அதற்கு முன்பும் மழைஇப்படி பெய்ததுண்டு.
1971 ல் பிரேஸிலின் ஜோவோ பெஸ்ஸோ எனும் ஊரில் லாரிக்கணக்கில் அவரைக்காய்கள் பெய்தன.
சரி மேலே செல்லும் விமானங்களில் இருந்து விழுகின்றன போலும் என்று நினைத்தார்கள். ஆனால் மீன்,காய்கறிகள், தவளைகள், முதலை,பாம்புகள்,எலிகள் என நம்பமுடியாத மாறுபட்ட மழைகள் பெய்தபோதுதான் விமானங்கள் காரணமில்லை என்று தெளிந்தனர்.
1995 பிரிட்டன் எடின்பரோவில் நடந்த சம்பவம்தான் விமானங்கள்தான் காரணம் என்று நினைக்க காரணம். அப்படி என்ன நடந்திருக்கும் ?. ஆம் மனிதக் கழிவுகள் மழையாகப் பெய்தது.
கனடாவில் நீலநிற ஐஸ்கட்டிகள் பெய்தன. ஆய்வக பரிசோதனைக்கு கொடுத்தபோதுதான் தெரிந்தது, அது உறைந்த சிறுநீர் என்று. அப்படியானால் நீல நிறம் எப்படி?. தண்ணீரில் போடப்பட்டிருந்த நீலநிற வில்லை(flush matic ) கரைந்ததால் வந்த நிறம்.
இதேபோல் ஒருமுறை மலமழை பெய்தபோது அதற்கேற்ப விமானமொன்றும் (எடின்பரோ- ஃபமிங் ஹார்ம் ஃப்ளைட் ) வானத்தில் பறந்தது கண்டு இப்படி முடிவுக்கு வந்தனர். ஆனால் விசாரித்ததில் விமானத்தின் கழிவறையில் எந்த கோளாறுமில்லை.
ஆனால் விமானமே இல்லாத காலத்திலும் இதுபோன்ற மழைகள் பெய்ததாக வரலாறு சொல்கிறது அதெற்கென்ன செய்வீர்கள் என்கிறபோது வாயடைத்துபோகிறார்கள் இந்தவியக்கியானகர்த்தாக்கள்.
அமெரிக்காவில் கூட ஒருமுறை இப்படி ஒரு மீன்மழை பெய்தது.அப்போது அவர்கள் சொன்ன விளக்கம்தான் இன்று வெகுவாக பரவிக்கிடக்கும் விளக்கம்.
அதாவது சுழல்காற்று கேள்விப்பட்டிருப்பீர்கள். வானத்துக்கும் பூமிக்கும் இடையே காற்று ஒரு புனல்போல காட்சியளிக்குமே. அதுதான். ஆறு குளம்,ஏரி போன்ற நீர்நிலைகள் மீது இந்த நீர்ச்சூழல் ஏற்படும்போது உள்ளிருந்து நீர்வாழ் உயிரிகள் உறிஞ்சப்பட்டு சுற்றிலும் 100 மைல் பரப்பிற்குள் மழையாகப் பொழிகின்றன. என்பதுதான் அந்த விளக்கம். ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும் இதுவும் உண்மையில்லை என்று அறிவியலின் தலையில் தட்டியது அனுபவம்.
உறிஞ்சப்படும்போது எல்லாமும் தானே உறிஞ்சப்படுகின்றன. மழையாய் வரும்போது மட்டும் எப்படி மீன் மட்டும்,தவளை மட்டும், பாம்பு மட்டும் வருகிறது . வானத்தில் ஏதும் விசேஷ பில்டர் இருக்கிறதா என்ற வாதம் எழுந்தபோது மீண்டும் அமைதியானர்கள் ஆய்வாளர்கள்.
ஆக, எது எப்படியோ இப்படி ஒன்று இயற்கையில் நடப்பது அசாதாரணமான ஒன்றுதான். மர்மம் என்றாலும் உண்மை ஒருநாள் வரத்தான் செய்யும்.
இன்றுவரையிலும் இதை ஒருவேளை வேற்றுகிரகவாசிகள் வேலையா என்போரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post