திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் சரிந்ததால் மீன்வரத்து குறைந்துள்ளது.
பழனி பகுதியில் பாலாறு அணை, குதிரையாறு அணை, வரதமாநதி அணை போன்றவை அமைந்துள்ளன. இவற்றில் பிடிக்கப்படும் மீன்கள் பழனி மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் விற்பனை செய்யப்படுகிறது.
தினமும், ஆயிரம் கிலோ அளவுக்கு மீன்கள் பிடிக்கப்பட்ட நிலையில், வறட்சி, மழையின்மை காரணமாக அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், மீன்வரத்து குறைந்துள்ளது. 200 முதல் 300 கிலோ வரை மட்டுமே மீன்கள் கிடைப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக மீன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது மட்டுமில்லாமல் விலையும் அதிகரித்துள்ளது.