பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள அயோத்தி நிலம் தொடர்பான வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று துவங்குகிறது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், கடந்த 2010ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. சர்ச்சைக்குரிய 2 புள்ளி ஏழு 7 ஏக்கர் நிலத்தை, சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாடா மற்றும் ராம் லல்லா ஆகிய அமைப்புகள் பிரித்துக் கொள்ள வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், 14 மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலம் தொடர்பாக சமரசம் செய்வதற்காக, 3 பேர் குழுவை, உச்ச நீதிமன்றம் அமைத்தது. இந்தக் குழு அனைத்து தரப்பினருடனும் ஆலோசனைகள் நடத்திய போதும், சமரசம் ஏற்படவில்லை.
இதையடுத்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான, 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு, ஆகஸ்ட் 6ம் தேதி முதல் இந்த வழக்கை தினமும் விசாரித்து வருகிறது. தீர்ப்பு எழுதுவதற்கு, நான்கு வாரங்கள் அவகாசம் அளிக்கும் வகையில், வரும் 17க்குள் விசாரணையை நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு வார தசரா விடுமுறை முடிந்து, இந்த வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை இன்று துவங்குகிறது. இஸ்லாமியர்கள் தரப்பில் இன்று வாதங்கள் முன் வைக்கப்பட உள்ளன.
அடுத்த 2 நாட்கள், இந்து அமைப்புகள் சார்பில் வாதிடப்படும். வரும், 17ல், இரு தரப்பும் தங்களுடைய இறுதி வாதங்களை முன் வைக்க உள்ளன. அரசியல் ரீதியில் மிகவும் முக்கியமான பிரச்னையாக உள்ளதால், இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை மற்றும் தீர்ப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், 27 ஆண்டுகளுக்கு பிறகு அயோத்தி வழக்கில் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ளநிலையில், முன்னெச்சரிக்கையாக வரும் டிசம்பர் 10ம் தேதி வரை அயோத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நீதிபதி அனுஜ்குமார் தெரிவித்துள்ளார்.
Discussion about this post