சுய சார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக, 101 வகையான பாதுகாப்பு தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுவதாக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் சர்வதேச அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து வருகிறது. இந்த நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சுய சார்பு இந்தியா திட்டத்தை முன்னெடுத்து செல்ல பாதுகாப்புத்துறை தயார் நிலையில் உள்ளதாகவும், அதன்படி 101 பாதுகாப்பு தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். தடை அறிவிப்பானது 2020ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை படிப்படியாக செயல்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ள அவர், உள்நாட்டிலேயே பாதுகாப்பு உபகணரங்களை தயாரிப்பதற்காக நடப்பு நிதியாண்டில் 52 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். சிறிய ரக பீரங்கிகள், துப்பாக்கிகள், ரேடார் கருவிகள் மற்றும் வாகனங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுவதாகவும், தொழில்துறை மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
Discussion about this post