மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. வைணவர்கள் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் ஏகாதசி அன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். இந்நாளின் முன்னிரவில் உறங்காமல் இருந்து திருமாலின் புகழ்பாடி கோவிலுக்கு செல்வார்கள். திருமங்கையாழ்வார் இந்த ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார்.
வைகுண்ட ஏகாதசியில் சொர்க்கவாசல் திறக்கப்படுவது ஏன்?
அவதார புருஷரான பெருமாளுடன் போரிட்டு, அவரின் அருள் பெற்ற மதுகைடவர்கள் என்ற அரக்கர்கள் இருவர், தாம் பெற்ற வைகுண்ட இன்பத்தை உலகில் உள்ள எல்லோரும் பெற வேண்டும் என்று விரும்பி பெருமாளிடம் வைகுண்ட ஏகாதசி தினத்தில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக தாங்கள் அர்ச்சாவதாரத்தில் வெளிவரும்போது தங்களை தரிசிப்பவர்களும், தங்களை பின்தொடர்ந்து வருபவர்களும் அவர்கள் எத்தகைய பாவங்கள் செய்து இருந்தாலும் அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.அவர்களின் வேண்டுகோளை பெருமாள் ஏற்றுக் கொண்டார். அதன் காரணமாகவே வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சாமி பவனி வரும் நிகழ்ச்சி ஏற்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.
எல்லையற்ற பலன்களை வைகுண்ட ஏகாதசி விரதம் தருவதால், இவ்விரதம் மிகச் சிறப்பாக மதிக்கப்படுகிறது. எனவே காயத்ரியை விட சிறந்த மந்திரமில்லை, தாயை விட சிறந்த தெய்வமில்லை, ஏகாதசியை விட சிறந்த விரதமில்லை என்ற வழக்கும் ஏற்பட்டது.
மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருப்பது மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு?
விஷ்ணுபுராணம் நூலில் அனைத்து ஏகாதசி நாட்களிலும் உண்ணாநோன்பு இருந்து பெறும் பயனை, வைகுண்ட ஏகாதசி அன்று இருக்கும் ஒருநாள் விரதத்தால் பெறலாம் என்றும் கூறப்படுகிறது. “மாதங்களில் நான் மார்கழி” என்று பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார். முக்தி எனப்படும் மீண்டும் பிறவாமையும் வைகுண்ட ஏகாதசி விரதத்தால் கிடைக்கிறது என்றும் கூறுகின்றனர்.
வைகுண்ட ஏகாதசியன்று எப்படி விரதம் இருக்க வேண்டும்?
சிறப்பு மிகுந்த ஏகாதசி விரதம் இருப்பவர்கள், ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையில் கண் விழித்து நீராடிவிட்டு, இறைவனை வழிபட்டு விரதத்தைத் தொடங்க வேண்டும். ஏகாதசி திதி முழுவதும் உணவு உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். குளிர்ந்த நீரை மட்டும் பருகலாம்.
மேலும் 7 முறை துளசி இலையை மட்டும் சாப்பிடலாம். குளிர்ந்த நீர், வயிற்றை சுத்தமாக்குகிறது. துளசி இலை வெப்பம் தரக் கூடியது. ஏகாதசி விரதம் இருப்பது மார்கழி மாதமான குளிர்காலம் என்பதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை உட்கொள்ள வேண்டும். முழு நாளும் உணவருந்தாமல் இருக்க முடியாதவர்கள், நெய், காய்கனிகள், பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து உண்ணலாம். இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் துதி முதலியவற்றை ஓதுவதுமாக இரவுப் பொழுதை உறங்காது கழிக்க வேண்டும்.
உணவு சாப்பிடும் முன் அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும். அன்று பகலில் தூங்காமல் இருக்க வேண்டும். 8 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 80 வயதிற்குட்பட்ட பெரியவர்கள் ஆகியோர் விரதம் மேற்கொள்ளத் தேவையில்லை என்று சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
Discussion about this post