இந்த நூற்றாண்டின் தொடக்கம் முதல் இமயமலையில் உள்ள பனிப் பாறைகளின் உருகும் வேகம் இரண்டு மடங்காக அதிகரித்துவிட்டதாக செயற்கைக்கோள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் ஆசிய கண்டத்தில் உள்ள இந்தியர்கள் உள்ளிட்ட, 80 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் தண்ணீர் மற்றும் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த அச்சமூட்டும் ஆய்வு முடிவுகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
1970களில் அமெரிக்கா-ரஷ்யா நாடுகளிடையே பனிப்போர் உச்சத்தில் இருந்தபோது, உலகம் முழுவதும் உள்ள நிலப்பரப்புகளை அமெரிக்க உளவு செயற்கைக் கோள்கள் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தின. இந்தப் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் 30 ஆயிரம் சதுர கிலோமீட்டர்கள் பரப்பை துல்லியமாக பதிவு செய்யக் கூடியவையாக இருந்தன.
இந்தப் புகைப்படத்தில் உள்ள இமய மலையின் மேல் பரப்பையும், பின்னர் 2000ஆம் ஆண்டிலும் தற்போதும் எடுக்கப்பட்ட செயற்கைக் கோள்களின் படங்களில் உள்ள இமயமலையின் மேற்பரப்பையும் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு ஒப்பிட்டுப் பார்த்து சமீபத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்ப்பட்டன. இம்மாதம் ‘சயின் அட்வான்’ இதழில் வெளியான இந்த ஆய்வின் முடிவுகள் மிகப்பெரிய அதிர்ச்சியையே நமக்குத் தருகின்றன.
’1975ல் இமயமலையில் இருந்த மொத்தப் பனிப்பாறைகளில் 28% இப்போது இல்லை!, இமயமலையின் 650 மிகப்பெரிய பனிப்பாறைகள் இருந்த இடம் தெரியாமல் கரைந்துவிட்டன, 2 ஆயிரம் கிலோ மீட்டருக்கு புதிதாகத் தரை தெரிகிறது’ – என்கின்றது இந்த ஆய்வு!.
1975ல் இருந்த பனிப்பாறைகளில் 87% கடந்த 2000 ஆம் ஆண்டில் இருந்தது. அடுத்த 2016ஆம் ஆண்டில் இது 72% ஆகக் குறைந்துவிட்டது – என்ற ஆய்வுத் தரவுகளில் இருந்து, பனி உருகும் வேகம் 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் 2 மடங்காக அதிகரித்துவிட்டதை அறிய முடிகின்றது. இந்த நிலை நீடித்தால் அடுத்த நூற்றாண்டின் போது இமயமலையில் பனிப் பாறைகளே இருக்காது!.
நிலக்கரி, எண்ணெய், எரிவாயு – இவற்றால் ஏற்படும் புகையே இமயமலையின் இந்த நிலைக்குக் காரணமாக உள்ளது. பல்வேறு வற்றாத ஜீவநதிகளின் தாயகமாக உள்ள இமயமலை வற்றினால் அது 80கோடிக்கும் மேற்பட்ட மக்களின் குடிநீரையும் வாழ்வாதாரத்தையும் ஒன்றுமில்லாமல் செய்துவிடும்.
மக்களுக்கு நேரடியாகப் பயன்படாத துருவப் பனிப்பாறைகள் உருகும் போதே காலநிலை மாற்றங்கள் மக்களை வாட்டுகின்றன, இதில் மக்கள் மத்தியில் வாழ்வாதாரமாக உள்ள இமயமலையும் வற்றினால் அது எந்தெந்த வகையான அழிவுகளை ஏற்படுத்தும் என்பதும் சூழலியலாளர்களின் அடுத்த அச்சமாக உள்ளது.
Discussion about this post