திண்டுக்கல் சுற்றுவட்டார கிராமங்களில் மாம்பழம் விளைச்சல் குறைந்துள்ளதாலும், உரிய விலை கிடைப்பதில்லை என்பதாலும், தமிழக அரசு உதவிட வேண்டும் என, மா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஹெக்டேர் பரப்பளவில் மா விவசாயம் நடைபெறுகின்றது. இதில் கல்லாமை, காசா, பங்கனப்பள்ளி, காதர், அல்போன்சா, செந்தூரம், பாலாமணி உள்ளிட்ட அனைத்து வகை மா ரகங்களும் பயிரிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இந்த வருடம் மழை பொழிவு இல்லாததால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 5 டன் விளையும் நிலையில், 1டன் விளைச்சல்தான் கிடைத்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அதே போல், சென்ற வருடம் ஒரு டன் மாம்பழம்,10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் வரை விலை போன நிலையில், இந்த வருடம் டன்னிற்கு அதிக பட்சம் 8 ஆயிரம் ரூபாய் வரைதான் விலை போவதாக கவலை தெரிவிக்கின்றனர். எனவே, பாதிப்படைந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Discussion about this post