தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததை அடுத்து, நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் பெய்த மிதமான மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கேரளாவில் தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கடந்த 2 நாட்களாக மிதமான மழை பெய்தது. செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த மிதமான மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடைந்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.