வேதாரண்யம் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நபார்டு வங்கியின் மூலம் உதவிபெற்று நாட்டுக்கோழி வளர்ப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதிகள், கடந்த ஆண்டு கஜா புயலின் கோர தாண்டவத்தால் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகின.இதனையடுத்து, கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் நபார்டு வங்கி பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது.அதனடிப்படையில், பல்வேறு குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும் 50 விவசாயிகளை தேர்ந்தெடுத்து, ஒவ்வொருவருக்கும் 50 நாட்டுகோழி குஞ்சுகள் மற்றும் அதனை வளர்ப்பதற்கு தேவையான கூண்டுகள் ஆகியவற்றை நபார்டு வங்கி வழங்கியது.
இதன் மூலம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பலர் தற்போது நாட்டுகோழிகளை சிறப்பான முறையில் வளர்த்து வருகின்றனர். அந்த வகையில் வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் நபார்டு வங்கி உதவியின் மூலம் நாட்டுகோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இவர் தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் மாந்தோப்பில் கோழிப் பண்ணை ஒன்றை அமைத்து, தோப்பின் நான்கு புறங்களிலும் வலைகளைக் கட்டி, கோழிகளை அடுத்தவர்களின் இடத்திற்குப் போக விடாமல் தனது சொந்த நிலத்துக்குள்ளேயே பாதுகாப்பாக வளர்த்து வருகிறார்.
இவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கால்நடை துறை செய்து வருவதாகவும், தற்பொழுது இவர் வளர்க்கும் நாட்டுக்கோழிகள் நல்ல முறையில் வளர்ந்து முட்டையிடும் பருவத்தை அடைந்துவிட்டதாகவும் கூறுகிறார்.இவர் தான் வளர்க்கும் கோழிகளுக்கு இயற்கையான அசோலா கோ-மூன்று வகைப் புல், அகத்திக்கீரை, மற்றும் தவிடு போன்ற இயற்கை தீவனங்களை உணவாக அளித்து வருகிறார்.
நபார்டு வங்கியின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 50 பேர், வங்கியிடமிருந்து நாட்டுக்கோழி குஞ்சுகள், அவற்றை வளர்ப்பதற்கான கூண்டுகள் ஆகியவற்றை இலவசமாகப்பெற்று நாட்டுகோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருவதாக விவசாயி பன்னீர் செல்வம் கூறுகிறார்.
இந்த நாட்டுக் கோழிகள் நன்கு வளர்ந்து முட்டையிட்டவுடன் நபார்டு வங்கித் தரக்கூடிய இங்குபேட்டர் கருவி மூலம் குஞ்சு பொரித்து, அவற்றை இப்பகுதியில் உள்ள புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்து அவர்களையும் பொருளாதார ரீதியாக உயர்த்த வேண்டும் என்ற வங்கியின் வேண்டுகோளை நிறைவேற்றவுள்ளதாக தெரிவித்தார்.
Discussion about this post