ஆரணி அருகே குடும்பத் தகராறு காரணமாக நபர் ஒருவர் 200 அடி உயர மின்கோபுரத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் நெல்வாய் பாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான ரமேஷ் என்பவருக்கும் அவருடைய மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றிரவு தகராறு முற்றிய நிலையில் இன்று காலை ரமேஷ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து அருகிலிருந்த 200அடி உயர மின்கோபுரத்தில் ஏறினார்.
இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ரமேஷ் கீழே வர மறுக்கவே அவரை மீட்டு கீழே கொண்டு வருவதற்காக தீயணைப்புத் துறை வீரர்கள் மூன்று பேர் கோபுரத்தின் மீது ஏறினர்.
தீயணைப்பு வீரர்கள் அருகில் வருவதை அறிந்த ரமேஷ் மின்கோபுரத்தில் இருந்து குதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post