ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் அரசை ஏமாற்றுவதற்காக 2 வாரங்களில் 23 முறை தங்களுக்குள் திருமணம் செய்து 11 இலவச வீடுகளைப் பெற்ற சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
சீனா அரசு ஒரு குறிப்பிட்ட பகுதியை தனது திட்டங்களுக்காக கையகப்படுத்தும் போது, அங்கு வாழும் தம்பதிகள் அனைவருக்கும் இன்னொரு இடத்தில் 430 சதுர அடி அளவுள்ள வீடுகளை இலவசமாகக் கொடுப்பதை ஒரு நிவாரணத் திட்டமாக வைத்துள்ளது. இந்தத் திட்டத்தில் விண்ணப்பித்த உடனேயே வீடுகள் கொடுக்கப்பட்டு வந்தன.
சீனாவின் ஷெஜியாங் மாகாணம் லிஷூய் பகுதிக்கு உட்பட்ட கிராமம் ஒன்று சீன அரசால் கையகப்படுத்தப்பட உள்ளதால், அங்கு இந்தத் திட்டம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதற்கு 6 நாட்கள் முன்பு மனைவி ‘ஷி’யை விவாகரத்து செய்திருந்த பான் என்பவர் இதனைக் கேள்விப்பட்டார், உடனே தனது முன்னாள் மனைவியை மீண்டும் திருமணம் செய்து கொண்டு, உடனடியாக வீட்டுக்காக அவர் விண்ணப்பித்தார், அவருக்கு வீடும் கிடைத்தது.
உடனே தனது உறவினர்களுடன் பேசிய அவர் தன் மனைவியை மீண்டும் விவாகரத்து செய்து, தனது சகோதரரின் மனைவியை மணந்து கொண்டு மீண்டும் வீட்டுக்கு விண்ணப்பித்தார், அவருக்கு இரண்டாவது வீடும் கிடைத்தது. உடனே அடுத்தடுத்து விவாகரத்துகளையும் மறுமணங்களையும் அவர் செய்து கொண்டார். இதில் பான் தனது சொந்த தாயைக் கூட ஒருமுறை திருமணம் செய்து கொண்டார்.
இப்படியாக பான் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் இரண்டு வாரங்களில் 23 முறை தங்களுக்குள் மீண்டும் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். இதன் மூலம் அவர்களுக்கு மொத்தம் 11 இலவச வீடுகள் கிடைத்தன. பான் குடும்பத்தின் இந்த மோசடி கிராம மேம்பாட்டு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே 11 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
மோசடியில் ஈடுபட்டவர்களில் 7 பேருக்கு இது மோசடி என்றே தெரியவில்லை. பான் உள்ளிட்ட 4 பேர் மட்டுமே மோசடிக்கு மூளையாக செயல்பட்டு உள்ளனர். இதனால் மற்ற 7 பேருக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. சீனாவைச் சேர்ந்த ‘பீப்பிள்’ஸ் டெய்லி’ இதழின் செய்தி மூலம் இந்த மோசடி உலகின் பார்வைக்கு வந்துள்ளது.
Discussion about this post