சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இயங்கி வந்த தனியார் நிறுவனம் ஒன்று வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்துள்ளது. இதனை நம்பி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அந்த நிறுவனத்தை அணுகிய பல இளைஞர்களுக்கு, நிருபன் சக்கரவர்த்தி மற்றும் அருணா அன்சிகா என்ற இருவர் வேலை கிடைப்பது உறுதி என ஆசை வார்த்தையை அள்ளி வீசியுள்ளனர். வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்ற ஆசையில் பட்டதாரி இளைஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் பணம் செலுத்தி உள்ளனர். பணம் செலுத்திய 35 நாட்களில் விசா கிடைத்துவிடும் என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து, அந்த நிறுவனம் சார்பில் அனுப்பப்பட்ட இளைஞர்கள் மலேசிய தூதரகத்தில் பதிவு செய்ய முயன்ற போது, போலியான விசா என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்று, இளைஞர்களின் விசாவில் வேறு ஒருவருடைய பெயர் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர்கள், கடந்த 17 ஆம் தேதி ஆயிரம் விளக்கு குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயலட்சுமியிடம் புகார் கொடுத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையம் சென்ற தகவலறிந்த நிருபன் சக்கரவர்த்தி மற்றும் அருணா இருவரும் சுதாரித்துக் கொண்டு, உடனடியாக அங்கிருந்த அலுவலகத்தை காலி செய்து விட்டு மாயமாகியுள்ளார்…
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், இவர்களால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் பலர், ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்த வண்ணம் உள்ளனர். தற்போது வரை 50க்கும் மேற்பட்ட புகார்கள் அளித்துள்ளனர். இதனையடுத்து உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி மற்றும் ஆய்வாளர் ஜெயலட்சுமி ஆகியோர் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு சென்னையை அடுத்த பருத்திப்பட்டில் அருணா அஞ்சிகா என்ற பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.