சொட்டு மருந்தைக் கண்களில் விட்டால் போதும். ஆயுளுக்கும் கண்ணாடியும் தேவையில்லை.அறுவை சிகிச்சையும் தேவையில்லை என இஸ்ரேலில் அண்மையில் நடந்த ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு
பார்வைக் கோளாறு வந்துவிட்டதா? அவ்வளவுதான். ‘‘இனி காலம் முழுவதும் கண்ணாடியோடதான் அலையணுமா?’’ என்பது பலரின் ஆதங்கமாக இருக்கும். ‘ஸ்டைலுக்கு கூலிங்கிளாஸ்’ அணிவதை விரும்புகிறவர்கள் கூடப் பார்வைக் கோளாறுக்காக கண்ணாடி அணிய விரும்புவது இல்லை. இதன் காரணமாகவே கண் அறுவை சிகிச்சை செய்துகொள்கிறவர்களும் உண்டு.
இந்தப் பிரச்சினைக்குப் புதிதாக வழி பிறந்திருக்கிறது. ‘‘சொட்டு மருந்தைக் கண்களில்விட்டால் போதும். ஆயுளுக்கும் கண்ணாடியும் தேவையில்லை, அறுவை சிகிச்சையும் தேவையில்லை’’ என்கிறது இஸ்ரேலில் அண்மையில் நடந்த ஓர் ஆய்வு. அதோடு, ‘‘மருத்துவரிடம்கூடப் போகத் தேவையில்லை. உங்கள் ஸ்மார்ட்போன்தான் உங்கள் மருத்துவர்.
அதைக்கொண்டு பரிசோதித்து, நீங்களே பார்வைக் குறைபாட்டுக்குத் தீர்வு கண்டுகொள்ளலாம்’’ என்று சொல்லி ஆச்சரியப்பட வைக்கிறது, அந்த ஆய்வு. அது கிட்டப்பார்வையோ, தூரப்பார்வையோ, பார்வைக் குறைபாடுகளுக்கு மொபைல்ஆப் உதவியுடன் ‘‘நானோ டிராப்ஸ்’’ என்னும் சொட்டு மருந்தை விட்டுச் சரிசெய்யலாம் என்பதையும் கண்டறிந்து இருக்கிறார்கள். இஸ்ரேலின் ஷாரே ஸெடெக் மருத்துவ மையமும் பார்இலான் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வில்தான் இந்தச் சொட்டு மருந்து கண்டறியப்பட்டு இருக்கிறது.
முதலில் உங்கள் மொபைல் போனில் இதற்கான பிரத்யேகமான ஆப்-ஐ பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். மொபைல் போனிலிருந்து வெளிப்படும் லேசர் ஒளியைக்கொண்டு சில நிமிடங்கள் கண்களின் கார்னியாவை ஸ்கேன் செய்ய வேண்டும். கடைசியாக, கண்ணில் இந்தச் சொட்டுமருந்தை விட்டால் போதும். கிட்டப்பார்வை, தூரப்பார்வைக் கோளாறுகளைச் சரிசெய்துவிடும் என்கிறார்கள், இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டவர்கள். இன்னும் இரண்டே ஆண்டுகளில் இந்த நவீன சொட்டு மருந்து, சந்தையில் விற்பனைக்கு வந்துவிடும் என்கிறார்கள்.
அறுவை சிகிச்சை எதுவும் இல்லாமல் சொட்டு மருந்து மூலம் கண் பிரச்சனை சரி செய்யும் இந்த முறை நடைமுறைக்கு வந்தால் கண் கோளாறுகளால் பாதிக்கப்படுபவர்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமையும்.
மேலும் இது குறித்த ஆராய்ச்சிகள் இன்னும் நிறைவடையவில்லை. நானோ டிராப்ஸ் குறித்த ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. முடிந்த பின்னர்தான் இதுகுறித்த கூடுதல் தகவல்களைக் கூற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post